ராமேஸ்வரத்தில் இருந்து மானாமதுரை, சிவகங்கை வழியாக சென்னை, வடமாநிலங்களுக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
ஆனால், பெரும்பாலான ரயில்கள் மாவட்ட தலைநகரான சிவகங்கையில் நிற்பதில்லை. அதே போன்று பிளாட்பாரத்தில் ரயில்கள் நிற்கும் முன்பதிவு பெட்டிகளை குறிப்பிடும் டிஜிட்டல் போர்டு இல்லை.
பயணிகளுக்கு போதிய குடிநீர், கழிப்பிட வசதியில்லை. பிளாட்பார மேற்கூரை முழுமையாக இன்றி சேதமடைந்துள்ளதால், மழை காலத்தில் பயணிகள் நனைந்தபடி 'லக்கேஜ்'களுடன்  செல்ல வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இது போன்று பழைய கட்டடத்தில் இயங்கிய ரிசர்வேஷன் கவுன்டர், சரக்கு பதிவு மையம், பயணிகள் ஓய்வு அறை செயல்பாடின்றி கிடக்கின்றன.
பொதுமேலாளர் வருகைக்கு பின்
இந்நிலையில் நவ., 29ம் தேதி தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.,சிங் தலைமையில் ரயில்வே அதிகாரிகள் சிவகங்கையில் ஆய்வு செய்தனர்.
அவர்களிடம் பல்வேறு அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினர், பயணிகள் சங்கத்தினர் கோரிக்கை வைத்தனர். சிவகங்கை ரயில்வே ஸ்டேஷனின் வளர்ச்சிக்கு உரிய பணிகளை செய்வதாக உறுதி அளிக்கப்பட்டது. சிவகங்கை மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றியாக சிவகங்கையில் நிற்காமல் சென்ற ஹூப்ளி (வண்டி எண்: 07355)- ராமேஸ்வரம், ராமேஸ்வரம் (வண்டி எண்: 07356) வாராந்திர சிறப்பு ரயில் நின்று செல்ல நடவடிக்கை எடுத்துள்ளனர்.
ஸ்டேஷனை புதுப்பிக்க முடிவு
இதன் அடுத்த கட்டமாக ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பாரத்தில் உள்ள பழைய தரைத்தளத்தை அகற்றி, உயர்த்தி புதிய தளமாக அமைக்கவும், இரண்டு பிளாட்பாரங்களில் உள்ள மேற்கூரையை முற்றிலுமாக அகற்றி, புதிதாக பிளாட்பாரம் முழுவதும் பயணிகளின் வசதிக்கு விடுதலின்றி மேற்கூரை அமைக்கவும், 2 வது பிளாட்பாரத்தில் வயதான, மாற்றுத்திறனாளி பயணிகளின் வசதிக்காக 'லிப்ட்' அமைக்கவும் நடவடிக்கை எடுத்து, அதற்கான ஆய்வுகளில் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
தொடர்ந்து பிளாட்பாரத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்லும் இடத்தை குறிப்பிடும் 'டிஜிட்டல்' போர்டு வைப்பதற்கான கணக்கெடுப்பு நடத்தியுள்ளனர்.

