ADDED : அக் 13, 2025 03:33 AM
திருப்புவனம், திருப்பாச்சேத்தி நகர்ப்பகுதிகள், கிராமப்புற பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மா, புளி, வேம்பு, பூவரசு, பனை, ஆல மரம், அரச மரம் என ஏராளமான மர வகைகள் சாலையோரம் நிழல் தந்து வருகின்றன.
லாடனேந்தல் - பாப்பான்குளம் விலக்கு வரை சாலையோரம் இருபுறமும் 100க்கும் மேற்பட்ட பனை மரங்கள் இருந்த நிலையில் தற்போது ஒரு சில மரங்களே உள்ளன.
பல இடங்களில் சாலை விரிவாக்கத்திற்காக மரங்கள் வெட்டப்பட்டாலும் திருப்புவனம், திருப்பாச்சேத்தி நகர்ப்பகுதிகளில் மரங்கள் அகற்றப்படவே இல்லை. நிழல் தரும் மரங்களால் ஓரளவிற்கு வெயிலின் தாக்கம் நகர்ப்பகுதியில் குறைந்துள்ளது. நகர் விரிவாக்கம் ஆகி வரும் நிலையில் பலரும் புறநகர் பகுதிகளில் சாலையோரம் புதிதாக வீடுகள் கட்டி வருகின்றனர்.
வீடுகள், வணிக வளாகங்கள் ஆகியவற்றை மரங்கள் மறைப்பதாகவும், வாகனங்கள் சென்று வர இடையூறாக உள்ளதாகவும் கருதி நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான மரங்களை வெட்டி வருகின்றனர்.
இரவில் மரங்களின் வேர்ப்பகுதியில் ஆசிட், வெந்நீர் ஊற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். அத்துடன் மரங்களின் வேர்ப்பகுதியில் குப்பைகளை குவித்து தீ வைத்து விடுகின்றனர்.
செல்லப்பனேந்தல் விலக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக நிழல் தந்து வந்த ஆலமரத்தை வெட்டி அகற்றி தற்போது மரம் இருந்ததற்கான அடையாளமே இல்லை.
இது குறித்து பலமுறை நெடுஞ்சாலைத்துறையிடம் புகார் செய்தும் நடவடிக்கை இல்லை. திருப்புவனம் பைபாஸ் ரோட்டை ஒட்டி விரிவாக்கமாகி வரும் நிலையில் சாலையோரம் புதிதாக வணிக வளாகங்கள் உருவாகி வருகின்றன.
வணிக வளாகங்களுக்கு இடையூறாக இருப்பதாக கூறி மரங்களை இரவோடு இரவாக வெட்டி வருகின்றனர்.
வெயிலின் தாக்கம் வருடம்தோறும் அதிகரித்து வரும் நிலையில் புதிதாக மரங்கள் வளர்க்கவும் நெடுஞ்சாலைத்துறை எந்த வித நடவடிக்கையும் எடுப்பதில்லை என புகார் தெரிவிக்கின்றனர்.