UPDATED : ஜூலை 01, 2026 09:37 PM
ADDED : ஜூலை 01, 2026 09:21 PM
காரைக்குடி:காரைக்குடி மாநகராட்சியில் பல்வேறு கட்சியினர் மற்றும் சமூக அலுவலர்கள் சார்பில் மனு கொடுக்கும் போராட்டம் நடந்தது.
காரைக்குடி மாநகராட்சியில் உள்ள அரசுக்கு சொந்தமான பொது இடங்களில் போஸ்டர் ஒட்டுவதற்கு மாநகராட்சி தடை விதித்துள்ளது. மேலும் விதிமுறைகளை மீறி ஒட்டப்பட்ட போஸ்டர்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், நேற்று இ.கம்யூ., ஏ.ஐ.டி.யு.சி., சி.ஜ.டி.யு., வி.சி.க., தமிழக மக்கள் மன்றம் மற்றும் சமூக நல ஆர்வலர்கள் பலர் மாநகராட்சி கமிஷனர் பாலுவை சந்தித்து மனு அளித்தனர். அதில் மக்கள் பிரச்னைகளுக்காக போஸ்டர் ஒட்டி வருகிறோம். போஸ்டர் ஓட்டுவதற்கு தடை விதித்துள்ளது ஏற்புடையதல்ல. போஸ்டர் ஒட்டுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். மாநகராட்சி அனுமதி பெறாமல் பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது அரசு அலுவலக சுவர்களில் போஸ்டர் ஒட்டக்கூடாது, தனியார் சுவர்களில் சம்பந்தப்பட்டவர்களிடம் அனுமதி பெற்று போஸ்டர் ஒட்டிக் கொள்ளலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
