காரைக்குடி, போடி, ராமநாதபுரத்தில் 'ஜிபே'யில் ரூ.34 லட்சம் பரிவர்த்தனை லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய அலுவலர்கள்
காரைக்குடி, போடி, ராமநாதபுரத்தில் 'ஜிபே'யில் ரூ.34 லட்சம் பரிவர்த்தனை லஞ்ச ஒழிப்பு சோதனையில் சிக்கிய அலுவலர்கள்
ADDED : ஜூலை 04, 2026 11:11 PM
காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சி, தேனி மாவட்டம் போடி ,ராமநாதபுரம் நகராட்சிகளில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நடத்திய சோதனையில் அலுவலர்கள் அலைபேசி வாயிலாக 'ஜிபே'யில் ரூ. 34 லட்சம் பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாநகராட்சி,நகராட்சிகளில் நேற்று முன்தினம் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர்.
சிவங்கை மாவட்டம் காரைக்குடி மாநகராட்சியில் நடந்த சோதனையில் பணியாளர்களின் அலைபேசி பணப்பரிவர்த்தனை குறித்து ஆய்வு செய்ததில் பல ஒப்பந்ததாரர்களிடம் இருந்து, வரைவாளர், கணக்காளர், உதவியாளர் வங்கிக் கணக்கிற்கு ரூ.8 லட்சம் வரை பணப்பரிவர்த்தனை நடந்துள்ளது தெரியவந்துள்ளது.
* ராமநாதபுரம் நகராட்சி அலுவலகத்தில் நடந்த சோதனையில் அலுவலர்களின் வங்கி பணப்பரிவர்த்தனைகளை சோதனை செய்ததில் வருவாய் ஆய்வாளர் கார்த்திகேயன் வங்கி கணக்கில் 3 ஆண்டுகளில் ரூ.25 லட்சம் அளவிற்கு சந்தேகத்திற்குரிய டிஜிட்டல் பரிவர்த்தனை நடத்தது தெரிய வந்தது.
இவரிடம் ஆதாரங்கள் இல்லாததால் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
* தேனி மாவட்டம் போடி நகராட்சி அலுவலகத்தில் தேனி லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று அதிகாலை 3:00 மணிவரை 11 மணிநேரம் கதவுகளை பூட்டியபடி கமிஷனர் உட்பட அலுவலக பணியாளர்களிடம் விசாரணை நடத்தினர். அவர்களது இருக்கைகள், டேபிள், பைகளை சோதித்ததில் கணக்கில் வராத ரூ. 91 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். அலுவலர்கள் அலைபேசிகளில் 'ஜிபே' மூலம் ரூ 1.05 லட்சம் பரிவர்த்தனை நடந்தது குறித்தும் விசாரணை நடத்தினர்.
