ADDED : டிச 18, 2024 07:42 AM
அண்மையில் பெய்த தொடர் மழையால் திருப்புத்துார் பகுதியில் பரவலாக பயிர்கள் சாய்ந்து நீரில் மூழ்கி பாதிக்கப்பட்டது. வேளாண் மற்றும் வி.ஏ.ஓ.,க்கள் வயல்களில் கடந்த ஆறு நாட்களாக ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதில் மணிமுத்தாறு பகுதி விவசாயிகள் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
திருக்கோஷ்டியூர் பிர்கா கிராமங்களில் கடந்த அக்டோபர் மாதத்திலேயே வயல்களில் விவசாயிகள் நெல்சாகுபடியை துவக்கி விட்டனர்.
தற்போது நெல் வளர்ந்து கதிர் பரிந்து விட்ட நிலையில் மழையால் பயிர்கள் சரிந்து விட்டன. தொடர்ந்து ஆற்றில் நீர் செல்வதால் வயல்களில் தேங்கிய நீரை வடிக்க முடியவில்லை.
இதுவரை 250 ஏக்கரில் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளது கணக்கெடுப்பில் கண்டறியப்பட்டுள்ளது. அக்டோபருக்கு பின்பு பயிரிட்டவர்களின் நிலங்களில் நீரை வெளியேற்றி காப்பாற்ற முடியும் என்பதால் பாதிப்பு மேலும் அதிகரிக்கவில்லை. இளையாத்தங்குடி பிர்கா பகுதியில் பயிர்கள் முழுமையாக பாதிக்கவில்லை.
இது குறித்து உதவி இயக்குனர் செந்தில்நாதன் கூறுகையில், மொத்தம் பயிரிட்டுள்ள 2800 எக்டேர் வயல்களில் நேற்று வரை கணக்கெடுப்பில் 100 எக்டேர் பாதிக்கப்பட்டுள்ளது.
அதில் கோயில் நிலங்களில் குத்தகை எடுத்து பயிரிட்டுள்ளவர்களுக்கு இழப்பீடு வழங்க முடியாது. தனி நபர் விவசாயிகளுக்கு அரசு இழப்பீடு எக்டேருக்கு ரூ.17 ஆயிரம் வழங்குகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடுக்கு பரிந்துரை செய்யப்படும்.
அக்.,மாதத்தில் மழை பற்றாக்குறையால் வறட்சியில் பாதிக்கப்பட்ட பயிரில் 10 எக்டேருக்கு இழப்பீடு கோரப்பட்டது.' என்றார்.
திருப்புத்துார் தாசில்தார் மாணிக்கவாசகம் கூறுகையில், மேலும் ஒரு வாரத்திற்கு கணக்கெடுப்பு பணி நடைபெறும். அதன் பின்னரே முழுமையான பாதிப்பு தெரிய வரும். நீர்ப்பிடிப்பு பகுதிகளில் உள்ள வயல்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது.' என்றார்.
திருப்புத்துார் பகுதியில் ஒரு சீசனில் முதலில் வறட்சியால் பயிர்கள் பாதிப்பு, பிறகு தொடர்மழையால் நீரில் பயிர் மூழ்குதல் என்று விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் நிறுவனம் சார்ந்த விவசாய நிலங்களில் குத்தகை பயிரிட்டவர்களுக்கு இழப்பீடு கிடைக்காமலும் போவது விவசாய தொழிலை பாதிப்புக்குள்ளாக்கும்.
அரசு தேவையான விதிவிலக்கை ஏற்படுத்தி பாதிக்கப்பட்ட பயிரிட்டவர்கள் அனைவருக்கும் இழப்பீடு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும்.