/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கூட்டுறவு வங்கியில் போலி நகையா குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்
/
கூட்டுறவு வங்கியில் போலி நகையா குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்
கூட்டுறவு வங்கியில் போலி நகையா குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்
கூட்டுறவு வங்கியில் போலி நகையா குழப்பத்தில் வாடிக்கையாளர்கள்
ADDED : டிச 05, 2024 05:51 AM
சிவகங்கை: திருப்புத்துார் அருகே நெற்குப்பை மத்திய கூட்டுறவு வங்கி கிளையில் ரூ.1.30 லட்சத்திற்கு அடமானம் வைத்த தங்க (37.400 கிராம்) செயின் போலி என ஆய்வுக்கு சென்றவர்கள் கூறியதால் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் நெற்குப்பை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி கிளை உள்ளது.இந்த வங்கியில் நவ., 21 அன்று நகை பரிசோதனை மேலாளர் தலைமையில் நகை மதிப்பீட்டாளர்கள் அடமானத்தில் 309 பாக்கெட்களில் இருந்த நகைகளை கூட்டு ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின் மூலம் ஒரு பெண்ணின் பெயரில் ரூ.1.30 லட்சம் அடமானத்தில் இருந்த தங்க செயின் (37.400 கிராம்) ஒன்று போலி என ஆய்வுக்குழுவினர் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் நகையின் உண்மை தன்மை குறித்து முழு விசாரணை மேற்கொள்ளாமல் கடன் தொகையை பெண்ணிடம் வசூல் செய்வதோடு, நகை பாக்கெட்டையும் அவரிடம் தராமல் போலீசில் புகார் செய்யுமாறு சிவகங்கை மத்திய கூட்டுறவு வங்கி நிர்வாகம் கிளை மேலாளருக்கு உத்தரவிட்டுள்ளது.
வங்கி கிளையில் கேட்டபோது, கடன் தொகையை செலுத்தி விட்டு, அப்பெண் நகையை வாங்கி சென்றுவிட்டதாக தெரிவித்தனர். சிவகங்கை மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி கூறியதாவது: நெற்குப்பை வங்கி கிளையில் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடக்கிறது. விசாரணை முடிவுக்கு பின் முழு விபரம் தெரியவரும், என்றார்.
இது போன்று நெற்குப்பை வங்கியில் அடமானம் வைத்த நகையின் உண்மை தன்மை தெரியாமல் வாடிக்கையாளர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.