இவ்வொன்றியத்தில் பிரான்மலை, ஒடுவன்பட்டி, மேலவண்ணாரிருப்பு மலைத்தொடர்களில் ஏராளமான காட்டுமாடுகள், குரங்குகள் உள்ளிட்ட வனவிலங்குகள் வசிக்கின்றன.
கோடைகாலத்தில் இரை, குடிநீர் கிடைக்காமல் இவை அடிவார கிராமங்களுக்கு படையெடுத்து குடியிருப்புகளையும் தோட்டங்களையும் நாசம் செய்வது தொடர்கிறது.
மழைக்காலத்திற்கு பிறகு இவை மலையை விட்டு இறங்காமல் மலைப்பகுதியிலேயே குடிநீர் தேவையை பூர்த்தி செய்து கொள்ளும் பொருட்டு வனத்துறை சார்பில் பல்வேறு சுனை ஓடைகளில் தடுப்பணைகள் கட்டப்பட்டது.
மழைநீர் சுனை நீராக மாறி கசியும் போது ஓடையாகவும், அருவியாகவும் உருவெடுத்து தொடர்ச்சியாக அமைக்கப்பட்ட தடுப்பணைகளில் பல மாதங்களுக்கு தண்ணீர் தேங்கி கிடக்கும். இவற்றை குரங்குகளும் காட்டு மாடுகளும் குடிக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் மலையில் உள்ள சில இடங்களில் கட்டப்பட்ட தடுப்பணைகளில் பழுது ஏற்பட்டு கசிவு காரணமாக தண்ணீர் ஓடை வழியாக செல்லாமல் வேறு பாதையில் வீணாகி வருகிறது.
இதனால் அதற்கு அடுத்து உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் இல்லாமல் வறண்டு கிடக்கிறது. இதனால் மழைக்காலம் முடிந்த பிறகு சுனை நீர் வற்றி வனவிலங்குகளுக்கு மீண்டும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே மலைத்தொடர்களில் அமைக்கப்பட்ட அனைத்து குட்டை மற்றும் தடுப்பணைகளை மறு ஆய்வு செய்து உடனடியாக பழுதுகளை சரி செய்ய வேண்டும்.

