தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/விஸ்தரிப்பு பகுதிகளில் அடிப்படை வசதி தாமதம் :திருப்புத்துாரில் கேள்விக்குறியாகும் வளர்ச்சி

விஸ்தரிப்பு பகுதிகளில் அடிப்படை வசதி தாமதம் :திருப்புத்துாரில் கேள்விக்குறியாகும் வளர்ச்சி

விஸ்தரிப்பு பகுதிகளில் அடிப்படை வசதி தாமதம் :திருப்புத்துாரில் கேள்விக்குறியாகும் வளர்ச்சி


UPDATED : செப் 22, 2026 04:11 PM

ADDED : செப் 22, 2026 04:03 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : செப் 22, 2026 04:11 PM ADDED : செப் 22, 2026 04:03 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திருப்புத்துார்:வேகமாக வளர்ந்து வரும் நகரான திருப்புத்துாரில் அதன் எல்லைப்புறத்தில் குடியிருப்புகள் விரிவடைந்து வருகின்றன. ஆனால் அதற்கேற்ப அடிப்படை வசதிகள் விரைவாக ஏற்படுத்தப்படாததால் குடியிருப்புவாசிகள் தவிக்கின்றனர். நகரின் வளர்ச்சியும் பாதிக்கிறது.

திருப்புத்துார் நகர் 18 வார்டுகளுடன் 15 ச.கி.மீ.பரப்பளவில் பரந்து விரிந்துள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக வேகமாக குடியிருப்புகள் நகரின் எல்லைப்புறத்தில் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சிவகங்கை ரோட்டில் வளர்ச்சி அதிகமாக உள்ளது. சிவகங்கை ரோட்டில் மருத்துவர் குடியிருப்பு, தென்மாப்பட்டில் கண்டரமாணிக்கம் சாலை பகுதி, காரைக்குடி ரோட்டில் பைபாஸ் ரோடு வரை, புதுக்கோட்டை ரோட்டில் மருதாண்டி ஊரணி, சிங்கம்புணரி ரோட்டில் பெரியகண்மாய் வரை, பொன்னமராவதி ரோட்டில் போலீஸ் குவார்ட்டர்ஸ்,மதுரை ரோட்டில் அன்னை சர்ச் வரையிலும் குடியிருப்புக்கள் உள்ளன.

நகரின் விரிவாக்கத்திற்கேற்ப தேவையான சாலை,தெருவிளக்குகள்,குடிநீர், வடிகால் அமைப்பு உள்ளிட்டவை விரைவாக ஏற்படுத்தப்படாததால் குடியிருப்புவாசிகள் சிரமப்படுகின்றனர். புதுக்கோட்டை ரோடு முதல் வீதியில் வடிகால் வசதி இல்லாமல் தவிப்பதும், 18 வது வார்டு ரணசிங்கபுரம் எல்லை பகுதியில் வசிப்பவர் குடிநீர் இணைப்பு கிடைக்காமலும் தவிக்கும் நிலை காணப்படுகிறது. இதனால் நகரின் வளர்ச்சி பாதிக்கிறது.

நகரின் வளர்ச்சிக்கேற்றபடி வருவாயும், மக்கள் தொகையும் அதிகரித்தாலும், நகராட்சியாக அந்தஸ்து வழங்காததால் நிர்வாகப் பிரச்னையால் நகரின் வளர்ச்சிக்கேற்ற முழுமையான திட்டமிடலுக்கு வாய்ப்பு இல்லாமல் போய் விட்டது. வீடு மனை விற்பவர்களால் நகரின் விரிவாக்கப்பகுதி திட்டமிடப்படுவதால் பொது நலன் முற்றிலுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் மழை நீர் வடிகால் அழிக்கப்பட்டு விட்டன.சாலைகள் குறுகியதாக உள்ளது.

இந்நிலை மாற்ற பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும். விரிவாக்கப் பகுதிகளில் உள்ளூர் போக்குவரத்திற்கு கூடுதலாக புதிய இணைப்புச் சாலைகள் உருவாக்கப்படவில்லை. தற்போது வளர்ந்து வரும் தம்பிபட்டி,புதுப்பட்டி குடியிருப்புக்களை இணைக்கும் விதமாக ரோடு வசதிகளை பேரூராட்சி உருவாக்க வேண்டும். அது போல சிவகங்கை ரோடு, கண்டரமாணிக்கம் ரோடு குடியிருப்புகளை இணைக்கும் விதமாக புதிய ரோடு வசதியை உருவாக்க வேண்டும். சாலை வசதி மட்டுமின்றி விடுபட்ட பகுதிகளில் புதிய குடிநீர் இணைப்பு வழங்கவும், கூடுதல் தெருவிளக்கு வசதி ஏற்படுத்தவும் பேரூராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென குடியிருப்புவாசிகள் எதிர்பார்க்கின்றனர்.

பேரூராட்சி பொறியாளர் தரப்பில் கூறுகையில்,‛ நிதிப்பற்றாக்குறையில் விரிவான முழுமையான திட்டமிட முடியவில்லை. அரசு தற்போது புதிய குடியிருப்புக்களுக்கு சாலை வசதி குறித்து கோரியுள்ளது. அதனால் விஸ்தரிப்பு பகுதிகளில் புதிய சாலை மற்றும் வடிகால் வசதி ஏற்படுத்துவதற்காக ஆய்வு செய்யப்பட்டு, மதிப்பீடு தயாரித்து அரசுக்கு அனுப்ப உள்ளோம்' என்றனர்.

பேரூராட்சியினர் கூறுகையில்‛ கழிவுநீர் வடிகால்கள் ஒருங்கிணைப்பு, வணிக வளாக கட்டடம்,நீர் நிலைகள் மேம்படுத்தும் திட்டங்கள், புதிய சாலைகளுக்கான திட்டங்கள் நிதி அனுமதிக்காக காத்திருக்கின்றன. அனுமதியானவுடன் பணிகள் நிறைவேற்றப்படும்' என்றனர்.

நகராட்சி அந்தஸ்து திருப்புத்துாருக்கு கிடைப்பதில் தாமதமாவதால் நகருக்கான எதிர்கால திட்டமிடலுக்கான ‛மாஸ்டர் பிளான்' உருவாக்குவதும் தாமதமாகிறது. இதனால் விரிவடையும் குடியிருப்புபகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து அடுத்த 10 ஆண்டு கால விரிவிற்கும் சேர்த்து அடிப்படை வசதிகளை உருவாக்க பேரூராட்சியினர் திட்டமிட வேண்டியது அவசியமாகும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us