ADDED : பிப் 16, 2024 05:23 AM
கார்டில் பெயர் நீக்கம் வேண்டாம்
திருப்புத்துார்: திருப்புத்துார் தாலுகாவில் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பிக்க பழைய ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்க அவசரப்பட வேண்டாம் என்று அதிகாரிகள் மக்களை அறிவுறுத்துகின்றனர்.
புதிய ரேஷன் கார்டு வழங்குவது பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதனால் திருமணமானவர்கள், தனிக்குடித்தனம் செல்பவர்கள் என்று திருப்புத்துார் பகுதியில் புதிய கார்டுக்கு விண்ணப்பித்தவர் பலருடைய விண்ணப்பங்கள் அனுமதிக்கப்பட்டும் புதிய கார்டுகள் வரவில்லை.
இதனால் இவர்கள் ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமலும், வேறு சான்றிதழ் போன்றவற்றிற்கு விண்ணப்பிக்க முடியாமல் தவிக்கின்றனர்.
புதிய கார்டுகள் தாமதமாகும் என்று தெரிந்தும் பலரும் ஆர்வமாக புதிய கார்டுக்கு விண்ணப்பித்து வருகின்றனர். இதற்காக ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்க கோரிக்கைகள் தொடர்ந்து வருகிறது.
பின்னர் புது கார்டு வராததால் மீண்டும் பழைய கார்டில் பெயரை சேர்க்கின்றனர். இதனால் நேரில் வரும் பெயர் நீக்க கோரிக்கைகளுக்கு அதிகாரிகள் அறிவுரை கூறுகின்றனர்.
புதிய கார்டு வழங்கத் துவங்கிய பின்னர் பெயர்களை நீக்கி புதிய கார்டுக்கு விண்ணப்பிக்கலாம் என அதிகாரிகள் அறிவுறுத்துகின்றனர்.