ADDED : மார் 19, 2026 04:42 AM
தேவகோட்டை: தேவகோட்டை ரஸ்தா வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
தேவகோட்டையில் இருந்து 10. கி.மீ. துாரத்தில் திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ளது தேவகோட்டை ரஸ்தா ரயில்வே ஸ்டேஷன். இது தான் தேவகோட்டைக்கான ரயில்வே ஸ்டேஷன். ராமேஸ்வரம் செல்லும் முக்கிய வழித்தடமாகும்.
ரயில்வே போர்டு ஆரம்பித்த போதே தேவகோட்டையை சேர்ந்த சோமையா செட்டியார் ரயில்வே போர்டு உறுப்பினராக இருந்தார். அந்த இடத்தில் சினிமா ஸ்டுடியோக்கள் இருந்ததால் சினிமா தொடர்பான நடிகர் ,நடிகையர், மற்றும் குழுவினருக்கு பயனுள்ளதாக இருந்தது. ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ், சேது, மானாமதுரை பாசஞ்சர் ரயில்கள் மட்டும் சென்று வந்தன. தற்போது ஸ்டுடியோக்கள் இல்லை.
தற்போது நகரமும் , மக்கள் தொகையும் வளர்ந்துள்ளது. தற்போது தேவகோட்டை ரஸ்தா வழியாக அதிக ரயில்கள் சென்று வருகின்றன. தற்போது மத்திய அரசும் இந்த வழித்தடத்தில் ரயில்களை இயக்க தொடங்கி உள்ளது. வட இந்தியர்கள் ராமேஸ்வரம் செல்ல இந்த வழித்தடத்தில் பயணிக்க துாரம் குறைவு. குறிப்பாக புவனேஸ்வர், ஹவுரா, வாரணாசி எக்ஸ்பிரஸ் செல்கிறது. கன்னியாகுமரி- புதுச்சேரி எக்ஸ்பிரஸ் ரயிலும் செல்கிறது.
தேவகோட்டை வழியாக செல்லும் அனைத்து ரயில்களும் தேவகோட்டை ஸ்டேஷனில் நின்று செல்லும். தற்போது எக்ஸ்பிரஸ் ரயில்கள் பிளாட்பார உயரத்தை காரணம் காட்டி நிற்பதை தவிர்த்தனர். தற்போது ஓரிரு ரயில்களை தவிர மற்ற ரயில்கள் நின்று செல்வதில்லை. தேவகோட்டையில் இருந்து 18 பஸ்கள் தினமும் சென்னைக்கும் , 8 பஸ்கள் கோயம்புத்தூருக்கு செல்கின்றன. தினமும் ஆயிரக்காணக்கானோர் பயணிக்கும் நிலையில் தேவகோட்டை நகரம் , அதன் கிழக்கே உள்ள ஊர்களில் வசிப்பவர்கள் 80 ஆயிரம் மக்கள் ரயில் பயணத்தை பயன்படுத்த முடியாமல் தவிக்கின்றனர். ஏனெனில் பல ரயில்கள் தேவகோட்டை ரஸ்தாவில் நின்று செல்வதில்லை.
ரயிலில் பயணம் செய்ய காரைக்குடிக்கு தான் செல்ல வேண்டும். காரைக்குடிக்கு பஸ்சில் சென்று அங்கிருந்து ரயில்வே ஸ்டேஷன் செல்ல ஆட்டோவில் தான் செல்ல வேண்டும். தேவகோட்டை ரஸ்தா வழியாக செல்லும் அனைத்து எக்ஸ்பிரஸ் ரயில்கள், பாசஞ்சர் ரயில்கள் மீண்டும் தேவகோட்டை ரயில்வே ஸ்டேஷனில் நின்று செல்ல வேண்டும்.
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரயில் ஏற்கனவே தேவகோட்டையில் நின்று சென்றது. தற்போது நிற்பதில்லை. இப்பகுதி மக்கள் திருநெல்வேலி, நாகர்கோவிலுக்கு குறைந்த நேரத்தில் செல்ல வசதியாக இருந்தது. எனவே பயணிகள் விருப்பப்படி அனைத்து ரயில்களும் இயக்க வேண்டும்.
