தேர்தலால் முடங்கிய வளர்ச்சிப் பணிகள்: விரைந்து முடிக்க வேண்டுகோள்
தேர்தலால் முடங்கிய வளர்ச்சிப் பணிகள்: விரைந்து முடிக்க வேண்டுகோள்
ADDED : மே 06, 2026 05:24 AM

இளையான்குடி: இளையான்குடி,மானாமதுரை ஒன்றியத்தில் தேர்தலால் முடங்கிய அடிப்படை வசதிகள் மற்றும் திட்ட பணிகளை விரைவில் துவங்க வேண்டுமென கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 55 ஊராட்சிகளில் 300க்கும் மேற்பட்ட கிராமங்களும், மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தில் 39 ஊராட்சிகளில் 250க்கு மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவு பெற்று 2 வருடங்களாகியும் தற்போது வரை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறாமல் உள்ளதால் கிராமங்களில் அடிப்படை வசதிகள் மற்றும் திட்டப்பணிகள் செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களாக சட்டசபை தேர்தலை முன்னிட்டு கடந்த 2 ஆண்டுகளில் நடைபெற்ற ஒரு சில பணிகள் கூட கடந்த 2 மாதங்களாக நடைபெறாமல் இருப்பதால் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் மற்றும் திட்டப்பணிகள் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.
இது குறித்து இளையான்குடி, மானாமதுரை பகுதி மக்கள் கூறியதாவது:
கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஊரக உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவதற்கு முன்னதாகவே ஊராட்சிகளில் போதிய நிதி இல்லை என அடிப்படை வசதிகள் மற்றும் திட்ட பணிகளை செய்யாமல் இருந்தனர்.
தவிர்க்க முடியாத சில பணிகளை மட்டும் மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவு பெற்று 2 ஆண்டுகளாகி விட்ட நிலையில் தற்போது வரை அதற்கு தேர்தல் நடத்தாமல் உள்ளனர்.
இதற்கிடையே சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக குடிநீர், சாலை, தெரு விளக்கு போன்றவற்றில் ஏற்பட்டுள்ள பழுதுகளை கூட சரி செய்ய முடியாத நிலை உள்ளது.
இந்நிலையில் தேர்தல் முடிவு வெளியான நிலையில் அதிகாரிகள் உடனடியாக கிராமப் பகுதிகளில் நிறைவேற்ற வேண்டிய அடிப்படை வசதிகள் மற்றும் கிராமப் பகுதி மக்களுக்கு தேவையான திட்டப் பணிகளையும் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் கூறியதாவது: சட்டசபை தேர்தல் விதிமுறைகள் வரும் 10ம் தேதி வரை அமலில் உள்ளது.முடிந்தவுடன் அடிப்படை வசதிகள் மற்றும் திட்ட பணிகள் விரைவாக நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.
