/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மடப்புரத்தில் 3 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
/
மடப்புரத்தில் 3 மணி நேரம் காத்திருந்த பக்தர்கள்
ADDED : ஆக 16, 2025 02:37 AM

திருப்புவனம்: ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று மடப்புரம் பத்ரகாளியம்மனை 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
ஆடி வெள்ளி அம்மன் கோயில்களில் கூட்டம் அதிகமாக வருவது வழக்கம். பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் ஒன்றான மடப்புரம் பத்ர காளியம்மன் கோயிலில் ஆடி கடைசி வெள்ளியை முன்னிட்டு நேற்று உச்சி கால பூஜையில் அம்மனை பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
உச்சி கால பூஜையை முன்னிட்டு விநாயகருக்கும், அடைக்கலம் காத்த அய்யனாருக்கும் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. ஒரு மணிக்கு வளையல் அலங்காரத்தில் காட்சி யளித்த அம்மனுக்கு மூன்று வித தீபாராதனை காட்டப்பட்டது. உச்சி கால பூஜை முடிந்த பின் பக்தர்களுக்கு எலுமிச்சம் பழம் பிரசாதமாக வழங்கப்பட்டது.
பாதுகாப்பு ஏற்பாடு வசதிகளை கோயில் உதவி ஆணையர் கணபதி முருகன் தலைமையில் அதிகாரிகள் செய்து இருந்தனர்.போக்குவரத்து போலீசார்
நேற்று கடைசி வெள்ளி என்பதால் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால் மடப்புரம் விலக்கிலேயே அரசு டவுன் பஸ்கள் தவிர மற்ற வாகனங்களை அனுமதிக்கவே இல்லை. இதனால் பக்தர்கள் சிரமமின்றி அம்மனை தரிசனம் செய்தனர்.