டிஜிட்டல் மயமான லைசென்ஸ் திட்டம் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு பாதிப்பு
டிஜிட்டல் மயமான லைசென்ஸ் திட்டம் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களுக்கு பாதிப்பு
ADDED : செப் 29, 2026 03:29 AM
சிவகங்கை: வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டிஜிட்டல் லைசென்ஸ் பெறும் முறை வந்துள்ளதால் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.
தமிழகத்தில் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் டூவீலர், கார், லாரி உள்ளிட்ட இலகு ரக, கனரக வாகனங்களை ஓட்ட லைசென்ஸ் வழங்கும் பணியை அரசு தனியாருக்கு ஒப்படைத்தது. 2009 முதல் அந்தந்த வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் லைசென்ஸ் கார்டு தயாரித்து, அதை அச்சடித்து, தபாலில் விண்ணப்பதாரருக்கு அனுப்பும் பணியை டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள்' செய்து வந்தனர். இதற்காக அரசு தனியார் நிறுவனத்திற்கு ஒரு லைசென்ஸ் கார்டு தயாரிக்க ரூ.200, தபால் செலவு ரூ.50 என வழங்கியது.
இந்நிலையில் லைசென்ஸ், ஆர்.சி., புத்தகம் உட்பட அனைத்து வாகன பணிகளும் டிஜிட்டல் மயமாகியுள்ளது. இனி நாட்டில் எந்த மாநிலங்களில் இருந்தும் கம்ப்யூட்டர் மூலம் டிரைவிங் லைசென்ஸ்க்கு விண்ணப்பித்து பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல்மயமானதால், தனியாருக்கு வழங்கிய ஒப்பந்தத்தை அரசு ரத்து செய்துள்ளது. இதனால் வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பணியாற்றிய டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள்' வீட்டிற்கு அனுப்பப்பட்டனர். கடந்த 17 ஆண்டாக இப்பணியை செய்து, துவக்கத்தில் மாதம் ரூ.2,500 ல் இருந்து தற்போது ரூ.11 ஆயிரம் வரை சம்பளமாக பெற்று வந்தவர்களின், குடும்ப வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்துள்ள து.
முதல்வர் விஜய் காக்க வேண்டும் பாதிக்கப்பட்ட டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர்கள்' கூறியதாவது: பிற அரசு துறைகளில் டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டராக' தொடர முதல்வர் விஜய் உத்தரவிட வேண்டும் என்றனர்.
டிஜிட்டல் மயத்தால் மாற்றம் வட்டார போக்குவரத்து அலுவலக அதிகாரி கூறியதாவது: லைசென்ஸ், ஆர்.சி., உட்பட வாகனம் சார்ந்த அனைத்து பணிகளும் டிஜிட்டல் மயமாகியுள்ளன. இது வாகனஓட்டிகளிடம் வரவேற்பை பெற்றுள்ளது. நாட்டில் எங்கிருந்தும் லைசென்ஸ் டிஜிட்டல் முறையில் டவுன்லோடு செய்யலாம் என்றார்.
