ADDED : பிப் 01, 2024 04:14 AM

சிங்கம்புணரி, : சிங்கம்புணரி அருகே மண்மலை பகுதியில் இருந்து மழைநீர் ஓடிவரும் கால்வாய் ஆக்கிரமிப்பு உள்ளிட்ட காரணங்களால் மறைந்து வருகிறது.
இவ்வொன்றியத்தில் அணைக்கரைப்பட்டி ஊராட்சி மேல்மலைகுடியிருப்பு அருகே உள்ள மண்மலை பகுதியில் பெய்யும் மழைநீர் அரணத்தங்குண்டு, வேட்டையன்பட்டி வழியாக அப்பகுதி கண்மாய்கள், குளங்களில் சென்று சேரும் வகையில் இயற்கையாக கால்வாய் அமைந்துள்ளது. அவை 30 ஆண்டுகளுக்கு முன்பு சீரமைக்கப்பட்டது.
தற்போது குடியிருப்பு விரிவாக்கம் உள்ளிட்ட காரணங்களால் பல இடங்களில் கால்வாய்களை காண முடியவில்லை. சில இடங்களிலும் சீமைக்கருவேல மரங்கள் வளர்ந்தும், குப்பை கழிவு கொட்டும் இடமாகவும் கால்வாய் மாறிவிட்டது.
மண்மலையில் பெய்யும் மழை நீர் நீர்நிலைகளுக்கு சென்று சேராமல்வீணாகி வருகிறது. இத்தண்ணீரை நம்பியுள்ள கூவானை கண்மாய் உள்ளிட்ட சுற்று வட்டார பாசன விவசாயிகள் விவசாய காலங்களில் அவதிப்படுகின்றனர்.
எனவே வேட்டையன்பட்டி மண்மலையில் பெய்யும் மழை நீர் பாசன கண்மாய்களுக்கு சேரும் வகையில் அனைத்து கால்வாய்களையும் கண்டுபிடித்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி சீரமைக்க விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.