/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அதிருப்தி: ரேஷன் அரிசியில் பூச்சி மருந்து வாடை
/
அதிருப்தி: ரேஷன் அரிசியில் பூச்சி மருந்து வாடை
UPDATED : ஜன 25, 2024 06:19 AM
ADDED : ஜன 25, 2024 05:17 AM
திருப்புவனம்: திருப்புவனத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகிக்கப்படும் பச்சரிசியில் பூச்சி மருந்து கலந்திருப்பதால் அவற்றை பயன்படுத்த முடியாமல் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திருப்புவனம் தாலுகாவில் 79 ரேஷன் கடைகள் மூலம் 38 ஆயிரத்து 82 அட்டைதாரர்களுக்கு பொருட்கள் வழங்கப்படுகிறது. உறுப்பினர்களின் எண்ணிக்கையை பொறுத்து 12 கிலோ முதல் 35 கிலோ வரை அரிசி வழங்கப்படுகிறது. அரிசி தவிர சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை, பாமாயில் உள்ளிட்டவைகளும் வழங்கப்படுகின்றன.
திருப்புவனம் தாலுகாவிற்கு மாதத்திற்கு 573 டன் அரிசி, 27 டன் துவரம்பருப்பு, 435 டன் சர்க்கரை, 101 டன் கோதுமை ரேஷன் கடைகள் மூலம் விற்பனை செய்யப்படுகிறது. திருப்புவனம் தாலுகாவிற்கு விநியோகம் செய்யப்படும் பொருட்கள் அனைத்தும் திருமாஞ்சோலை கிட்டங்கியில் இருப்பு வைக்கப்படுகிறது. குறிப்பிட்ட கால இடைவெளியில் டெண்டர் விடப்பட்டு பருப்பு, கோதுமை உள்ளிட்டவை கொள்முதல் செய்யப்படுகின்றன. பொருட்கள் அனைத்தும் ஒரே கிட்டங்கியில் வைக்கப்பட்டு சுழற்சி முறையில் விநியோகத்திற்கு அனுப்பப்படுகின்றன.
அரிசி, பருப்பு உள்ளிட்டவை மீது பூச்சி வராமல் இருக்கவும், சர்க்கரை உள்ளிட்டவை மீது எறும்பு வராமல் இருக்க பூச்சி மருந்தை தெளிக்கின்றனர். இதுகுறித்து பலமுறை பொதுமக்கள் புகார் அளித்தும் இதுவரை அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை. திருப்புவனம் மற்றும் புதூர் பகுதியில் வழங்கப்பட்ட பச்சரிசியில் குளோரின் பவுடர் அதிகளவு கலந்திருப்பதால் துர்நாற்றம் வீசி அதனை பயன்படுத்தி எதுவுமே செய்ய முடியவில்லை. பலமுறை அரிசியை தண்ணீரில் கழுவி ஊற்றியும் வாடை போகாததால் பலரும் பச்சரியை பயன்படுத்தவில்லை.
அதிகாரிகள் தரப்பில் கூறுகையில்: திருமாஞ்சோலை கிட்டங்கி கிராமத்திற்கு மத்தியில் இருப்பதால் அரிசியில் வண்டு, பூச்சி வராமல் இருக்க தார்ப்பாய் வைத்து மூடி அதன் மேல்தான் பூச்சி மருந்து தெளிப்போம் என்றனர்.
எனவே மாவட்ட நிர்வாகம் திருப்புவனம் பகுதி ரேஷன் கடைகளில் உரிய விசாரணை நடத்த வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.