/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனம் பஸ் ஸ்டாண்ட் இடம் தேர்வில் அதிருப்தி; மக்களுக்கு பயன்படும் இடத்தில் அமையுமா
/
திருப்புவனம் பஸ் ஸ்டாண்ட் இடம் தேர்வில் அதிருப்தி; மக்களுக்கு பயன்படும் இடத்தில் அமையுமா
திருப்புவனம் பஸ் ஸ்டாண்ட் இடம் தேர்வில் அதிருப்தி; மக்களுக்கு பயன்படும் இடத்தில் அமையுமா
திருப்புவனம் பஸ் ஸ்டாண்ட் இடம் தேர்வில் அதிருப்தி; மக்களுக்கு பயன்படும் இடத்தில் அமையுமா
UPDATED : ஏப் 07, 2025 07:47 AM
ADDED : ஏப் 07, 2025 07:02 AM

நகரின் வளர்ச்சி போக்குவரத்து மற்றும் பஸ் ஸ்டாண்ட் வசதியை பொறுத்தே அமைகிறது. பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் திருப்புவன நகர் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது.
மதுரை - ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள திருப்புவனத்தில் பஸ் ஸ்டாண்ட் இன்றி மக்கள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனத்திற்கு தினசரி பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர், விவசாயிகள், கூலி தொழிலாளர்கள், என 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வந்து செல்கின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி, கமுதி, ஏர்வாடி, ராமேஸ்வரம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் பஸ்கள் அனைத்தும் திருப்புவனம் வழியாக சென்று வருகின்றன.
பஸ் ஸ்டாண்ட் இல்லாததால் வெயிலிலும் மழையிலும் ரோட்டிலேயே பயணிகள் பஸ் ஏறி இறங்கி சென்று வருகின்றனர்.
திருப்புவனத்தில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் அருகே இரண்டு ஏக்கரில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க கோரி 2001ல் அனைத்து கட்சி சார்பில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்து துப்பாக்கி சூடு வரை சென்றது.
இது தொடர்பான வழக்கில் 100க்கும் மேற்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் பஸ் ஸ்டாண்ட் அமைக்க மின் எரிவாயு மயானம் அருகில் உள்ள 72 சென்ட் பரப்பளவு உள்ள குப்பை கிடங்கு இடத்தை கலெக்டர் ஆய்வு செய்து அனுமதி வழங்கி விட்டதாகவும், ஐந்தாண்டுகளுக்கும் மேலாக குவித்து வைக்கப்பட்டுள்ள குப்பையை தேளி அருகே இடமாற்றம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தது மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பஸ் ஸ்டாண்ட் அமைப்பது எதிர்கால வளர்ச்சிக்கு உகந்ததாக இருப்பதோடு அனைத்து தரப்பினரும் ஏற்று கொள்ளுமாறு அமைய வேண்டும் என்றும், பல லட்சம் பணம் செலவு செய்து இளையான்குடியில் அமைக்கப்பட்ட பஸ் ஸ்டாண்ட் இன்று வரை முழுமையாக செயல்படாமல் பெயரளவிலேயே செயல்பட்டு வருவது போன்று அமைந்து விடக்கூடாது என மக்கள் கருதுகின்றனர்.
பூர்வீக வைகை பாசன விவசாய சங்க பொதுச் செயலாளர் ஆதிமூலம் கூறுகையில்:
திருப்புவனத்தில் 2000 ஏப்.1ல் அப்போதைய கலெக்டர் கோபாலகிருஷ்ணன் யூனியன் அலுவலகம் அருகே உள்ள இடத்தை தேர்வு செய்து பேருந்து நிலையம் அமைத்து பஸ்கள் வந்து சென்றன.
பின்னர் அது செயல்பாட்டில் இல்லை. இப்பகுதியில் நிரந்தர பேருந்து நிலையம் இல்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அப்போதைய கலெக்டர் கோபாலகிருஷ்ணன் அமைத்துக் கொடுத்த அதே இடத்தில் நிரந்தர பேருந்து நிலையம் அமைத்து தர வேண்டும்.
தேளி பொன்மணி கூறுகையில்: தேளி கிராமத்தில் நான்கு ஏக்கர் நிலம் வாங்கி பேரூராட்சி குப்பை கொட்டிய போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் நிறுத்தி விட்டனர். குப்பைகளை தரம் பிரித்து அழிக்க எந்த ஏற்பாடும் செய்யாமல் அதிகாரிகள் அலட்சியமாக செயல்பட்டு வருகின்றனர். மீண்டும் குப்பைகளை தேளிக்கு கொண்டு வந்தால் போராட்டம் நடத்தப்படும் என்றார்.
தி.வடகரை கலாம் கார்த்திகேயன் கூறுகையில்: யூனியன் அலுவலகம் அருகே உள்ள இடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைக்கப்பட்டால் மட்டுமே மாணவ, மாணவியர் என அனைத்து தரப்பினருக்கும் வசதியாக இருக்கும், குப்பை கிடங்கில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பதால் மீண்டும் மாணவ, மாணவிகள் சிவகங்கை ரோட்டிலேயே நின்று பஸ் ஏறி இறங்குவார்கள், பஸ் ஸ்டாண்ட் பயன்பாடின்றி தான் இருக்கும்.
குப்பைக் கிடங்கு இடத்தில் பஸ் ஸ்டாண்ட் அமைத்தால் தெற்கே ரயில் இருப்புப் பாதை, வடக்கே தேசிய நெடுஞ்சாலை, கிழக்குப் பகுதியில் மின் மயானம் என எதிர்காலத்தில் விரிவாக்கம் செய்ய வாய்ப்பில்லை, என்றார்.
மணல்மேடு ராஜா கூறுகையில்: யூனியன் அலுவலகம் அருகே தான் பஸ் ஸ்டாண்ட் அமைக்க வேண்டும் என்பது எங்கள் கோரிக்கை, இதற்காக நடந்த போராட்டத்தில் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு நடந்து வருகிறது.
பேரூராட்சிக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ள நிலையில், பழைய கட்டடம் பழுதடைந்து விட்டது. அந்த இடம், அல்லது போலீசார் கவாத்து மைதானம் ஆகியவற்றில் பஸ்கள் வந்து செல்லும் வகையில் ஷெட் போன்று அமைக்கலாம். அதனை விடுத்து குப்பை கிடங்கில் பஸ் ஸ்டாண்ட் அமைப்பதால் அரசின் நிதி வீணாகும் அபாயம் உள்ளது. கலெக்டரிடம் எங்கள் கோரிக்கையை தெரிவித்த போது குப்பைக்கிடங்கில் பஸ் ஸ்டாண்ட் என்பது இறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தாக கூறினார்.
தமிழக அரசு நிதி ஒதுக்கி பஸ் ஸ்டாண்ட் அமைக்க முயற்சி எடுத்து வரும் நிலையில் அதிகாரிகள் அனைத்து தரப்பினரின் கருத்தை அறிந்து அதன் அடிப்படையில் செயல்படுவது திருப்புவனத்தின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும்.

