ADDED : மார் 02, 2024 11:55 PM

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் கிராமங்கள், நகரங்களில் உள்ள தண்ணீர் தொட்டி பலவும் காட்சி பொருளாக இருப்பதால் பொதுமக்கள் சிரமத்திற்குஉள்ளாகி வருகின்றனர்.
திருப்புவனம் வட்டாரத்தில் 45 ஊராட்சிகளைச் சேர்ந்த 173 கிராமங்கள் உள்ளன. இக்கிராமங்களில் உள்ள பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஆங்காங்கே ஒரு லட்சம் முதல் இரண்டு லட்ச ரூபாய் மதிப்பீட்டில் வரை ஆழ்துளை கிணறு அமைத்து குடிநீர் விநியோகம் நடைபெறுகிறது.
கோடை வெயில் காரணமாக பொதுமக்கள், கால்நடைகள் தாகம் தணிக்க அமைக்கப்பட்ட இந்த தண்ணீர் தொட்டிகள் பலவும் சேதமடைந்த நிலையில் உள்ளன. வறட்சி காலங்களிலும் தண்ணீர் தட்டுப்பாடின்றி கிடைக்கும் வகையில் ஆழ்துளை கிணறுகள் அமைக்கவேண்டும், ஆனால் நடைமுறையில் அதிகாரிகள் ஆய்வு செய்யாமலேயே குடிநீர் தொட்டி அமைத்த ஒப்பந்தகாரர்களுக்கு பணத்தை வழங்கி விட்டனர்.
குடிநீர் தொட்டி அமைக்கப்பட்ட ஒருசில ஆண்டுகளிலேயே நீருற்று இல்லாமலும், தண்ணீர் தொட்டிகள் சேதமடைந்தும் தொட்டிகள் காட்சிப்பொருளாகவே உள்ளன. பல இடங்களில் ஆழ்துளை கிணறுகளில் உள்ள மோட்டார்கள் மாயமாகி விட்டன.
மோட்டார்கள் இயக்க பொருத்தப்பட்ட ஸ்விட் உள்ளிட்ட மின்சாதன பொருட்களும் சேதமானது. வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தண்ணீர் தொட்டிகள் பலவும் காட்சிப்பொருளாக இருப்பதாக புகார் எழுந்துள்ளது.

