வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும்: விவசாயிகள் வலியுறுத்தல்
UPDATED : நவ 26, 2026 06:54 PM
ADDED : நவ 26, 2026 06:54 PM

படம் உண்டு சிவகங்கை: சிவகங்கையை வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் வலியுறுத்தினர்.
சிவகங்கையில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கோட்டாட்சியர் ஜெபி கிரேசியா தலைமை வகித்தார். கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், துணை கலெக்டர் (பயிற்சி) சங்கீத், வேளாண் இணை இயக்குனர் (பொறுப்பு) மதுரை சாமி, தாசில்தார்கள் விஜயகுமார், சகாயமேரி, ராஜலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்தில் நடந்த விவாதம்: விஸ்வநாதன், சிவகங்கை: உரியநேரத்தில் மழையின்றி நெற்பயிர்கள் விளைவிக்க முடியவில்லை. எனவே சிவகங்கையை அரசு வறட்சி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். வேளாண் இணை இயக்குனர்: நடப்பாண்டு 1.50 லட்சம் ஏக்கரில் நெல் நடவு செய்தனர். 75 ஆயிரம் ஏக்கர் விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர். எஞ்சிய விவசாயிகள் செய்யவில்லை. வறட்சியை கணக்கிடுமாறு அரசுக்கு பரிந்துரை செய்துள்ளோம். முத்துராமலிங்கம், வேம்பங்குடி: சிப்காட் துவக்குவதற்கான அளவீடு பணிகள் நடக்கிறது. இதனால் 12 கிராம விவசாயம் பாதிக்கும். கோட்டாட்சியர்: பொதுவாக இங்கு சிப்காட் அமைக்க சாத்திய கூறுகள் இருக்கிறதா என்பதை தான் ஆய்வு செய்கின்றனர். இங்கு சிப்காட் வரும் என உறுதியாக சொல்ல முடியாது. சந்திரன்: மேலுாரில் திறக்கப்படும் பெரியாறு அணை தண்ணீர் 131 கண்மாய்களை நிரப்ப வேண்டும். ஆனால், கண்மாய்க்கு நீர் திறக்கவில்லை. காஞ்சிரங்கால் முதல் மறவமங்கலம் வரை நீட்டிப்பு கால்வாய் ஆக்கிரமிப்பு அகற்ற வேண்டும். மருது, வழக்கறிஞர், சிவகங்கை: சிவகங்கை தெப்பக்குளம் 5 ஏக்கரில் உள்ளது. தற்போது இவற்றிற்கு பெரியாறு தண்ணீர் விடாமல், சாக்கடை கழிவுநீர் தேங்கி சுகாதாரக்கேட்டை ஏற்படுத்துகிறது. தெப்பக்குளத்தை துார்வார வேண்டும். கருப்பையா, சிறுசெங்குளிபட்டி: சிவகங்கை நகரில் தெருவிளக்குகள் முறையாக பராமரிப்பதே இல்லை. இரவில் இருளில் மக்கள் தவிக்கின்றனர். பாதாள சாக்கடை இணைப்பு கோரி டெபாசிட் செலுத்தியும் இணைப்பு வரவில்லை. விஸ்வநாதன், சிவகங்கை: முழு அளவில் பயிர் கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். சேதுராமன், பிரவலுார்: ஒக்கூர் அருகே பிரவலுார் உட்பட சுற்றுப்புற கிராமங்களில் காவிரி கூட்டு குடிநீர் குழாய் பதித்து ஒரு ஆண்டிற்கு மேலாகியும் குடிநீர் வினியோகம் இல்லை.மோகன், திருப்பாச்சேத்தி: இந்த ஊராட்சியில் 4 குடிநீர் மேல்நிலை தொட்டி உள்ளது. ஆனால், திருப்பாச்சேத்தி, நடுவீதி உட்பட முக்கிய தெருக்களில் குடிநீர் வினியோகம் கடுமையாக பாதித்துள்ளன. இதனால் குடிநீரை விலை கொடுத்து வாங்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம். இவ்வாறு விவாதம் நடந்தது. ///
