ADDED : மார் 08, 2026 04:39 AM
தேவகோட்டை: தேவகோட்டையில் பஸ் ஸ்டாண்ட் ரோடு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் விபத்து நடந்தால் யார் பொறுப்பு ஏற்பது என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர்கள் ஆவேசமாக பேசினர்.
தேவகோட்டை நகராட்சி கூட்டம் நகராட்சி தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் நடந்தது. துணை தலைவர் ரமேஷ், பொறியாளர் மீரா அலி முன்னிலை வகித்தனர்.
அய்யப்பன்: பழைய பஸ் ஸ்டாண்டில் கட்டப்பட்ட தகரங்கள் கீழே விழுந்து வருகிறது. நாளுக்கு நாள் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருகிறது. ரோட்டில் நடக்க முடியவில்லை.
அகிலா குமாரி: பழைய பஸ் ஸ்டாண்டில் ரோட்டில் கடைகளை அமைத்து உள்ளனர். நடக்க முடியவில்லை. நகராட்சியை மக்கள் திட்டுகிறார்கள்.
வடிவேல் முருகன்: தினசரி மார்க்கெட் கடைகளை சிலம்பணி ஊருணி அருகே மாற்றினோம். தற்போது பழைய பஸ் ஸ்டாண்டில் வாடியார் வீதியில் அதே இடங்களில் கடைகள் போட்டு உள்ளனர். மாற்றப்பட்ட இடத்தில் வியாபாரமே இல்லை.
பழைய இடங்களில் புதியவர்கள் கடைகள் அமைத்து வியாபாரம் நடக்கிறது. மீண்டும் பழைய இடத்திலேயே கடைகளை அமைக்கவா என வியாபாரிகள் கேட்கிறார்கள். ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றுங்கள். இல்லை காலி செய்து போனவர்களை மீண்டும் கடை அமைக்க அனு மதியுங்கள். இயந்திரத்தை இயக்க டிரைவர் இல்லாததால் கால்வாய் சுத்தம் செய்யவில்லை.
சுதா: ஒன்றரை ஆண்டு களாக எந்த பணியும் நடக்கவில்லை. தற்போது பழுதாகி இருக்கும் விளக்கு எரியவில்லை யெனில் குண்டு பல்பு போடுகிறார்கள். ரோட்டில் பாதி ரோடு தான் போட்டுள்ளனர்.
பாலமுருகன்: வார்டில் ஒரு மாதமாக குடிநீர் வரவில்லை. அதிகாரிகளிடம் கூறியும் நடவடிக்கை இல்லை. விரைந்து குடிநீர் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
தலைவர்: பல பணிகள் ஒப்புதல் கொடுக்கப்பட்டு உள்ளது. டெண்டர் விட்டும் பணிகளை துவக்காமல் இருக்கிறீர்கள் என்ன காரணம்.பஸ் ஸ்டாண்டில் ஆக்கிரமிப்பு கடைகளை தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மார்க்கெட்டிற்கு மாற்ற உறுதியான நட வடிக்கை எடுங்கள்.
பணியாளர்களுக்கு 3, 6 மாதம் சம்பளம் போடவில்லை எனில் டிரைவர்கள் எப்படி வேலை பார்ப்பார்கள். மாதாமாதம் சம்பளம் வழங்குங்கள் என அதிகாரிகளுக்கு கண்டிப்புடன் உத்தரவிட்டார்.
