/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரை நான்குவழிச்சாலையில் ஆக்கிரமிப்பு
/
மானாமதுரை நான்குவழிச்சாலையில் ஆக்கிரமிப்பு
ADDED : டிச 06, 2024 05:38 AM

மானாமதுரை: மானாமதுரையில் மதுரை, ராமேஸ்வரம் நான்கு வழி சாலையில் பெருகிவரும் ஆக்கிரமிப்புகளால் விபத்து அபாயம் உள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
மதுரையில் இருந்து மானாமதுரை வழியாக பரமக்குடி வரை நான்கு வழிச்சாலையும், பரமக்குடியிலிருந்து ராமேஸ்வரம் வரை இருவழிச்சாலையாகவும் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு மாற்றப்பட்டு தற்போது போக்குவரத்து நடைபெற்று வருகிறது.
இச்சாலையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் செல்கிறது. மானாமதுரை பகுதியில் தல்லாகுளம் முனியாண்டி கோயிலிருந்து பீசர்பட்டினம் விலக்கு வரை, வழிவிடு முருகன் கோயிலில்இருந்து சங்கமங்கலம் வரை சாலையின் இரு புறங்களிலும் ஆக்கிரமிப்பு அதிகரித்து வருவதால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஒட்டிகளும்,சமூக ஆர்வலர்களும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:
மானாமதுரை நகர்ப்பகுதி வழியாக செல்லும் நான்கு வழிச்சாலையை ஒட்டி ஏராளமான குடியிருப்புகளும், கடைகளும் பெருகி வருகின்றன. இந்நிலையில் நான்கு வழிச்சாலைக்காக இடங்களை கொடுத்து அதற்கான இழப்பீடை முழுமையாக பெற்ற சிலர் சாலை ஓரங்களில் கடைகளை வைத்துக்கொண்டு ஆக்கிரமிப்பு செய்து வருகின்றனர்.
மேலும் இழப்பீடு பெற்ற இடத்தில் கடைகளை வாடகைக்கு விட்டு அதன் மூலமும் வருமானம்பார்த்து வருகின்றனர்.இதனை நான்கு வழிச்சாலை ஆணைய அதிகாரிகள் மற்றும் சாலை பராமரிப்பாளர்கள் கண்டுகொள்ளாமல் இருந்து வருகின்றனர்.
இதனால் இக்கடைகளின் முன்பாக வாகனத்தை நிறுத்தி வைப்பதினால் நான்கு வழிச்சாலையில் வேகமாக செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளது.ஆகவே
மானாமதுரை பகுதியில் நான்கு வழிச்சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.
இதுகுறித்து நான்கு வழிச்சாலை ஆணைய அதிகாரிகள் கூறியதாவது, நான்கு வழிச்சாலையில் ஆக்கிரமிப்பு செய்தவர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.விரைவில்அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.