ADDED : அக் 28, 2024 07:41 AM

திருப்புத்தூர்: திருப்புத்தூர் ஒன்றியம் மணக்குடி பாலாற்றில் கட்டப்பட்டுள்ள பாலத்தில் கீழே தடுப்புச்சுவர் கட்டப்படாததால் ஆற்றங்கரையில் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது.
திருப்புத்தூர் ஒன்றியம் மணக்குடி வழியாக சிங்கம்புணரி - மதுரை ரோடுகளை இணைக்கும் இணைப்பு ரோடு செல்கிறது.
அதில் பாலாறு செல்லும் இடத்தில் கடந்த ஆண்டு பாலம் கட்டப்பட்டுள்ளது. சில நாட்களுக்கு முன்பாக பாலாற்றில் நீர்வரத்து ஏற்பட்டு இந்த பாலத்தின் வழியாக நீர் கடந்து சென்றது. அப்போது பாலத்தின் இருபுறமும் ஆற்றங்கரையோரத்தில் தடுப்புச்சுவர் கட்டப்படாததால் மண் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆற்றோர மண் கரை வெகுவாக அரிக்கப்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஆற்றில் பெருவெள்ளம் வந்தால் இந்த மண் அரிப்பு மேலும் அதிகரிக்கும். இதனால் ஆற்றின் நீரோட்டத்தின் திசை மாறிவிடும்.
கிராமத்தினர் இந்த மண் அரிப்பை தடுக்க பாலத்தையொட்டி இருபுறமும் சிறது நீளத்திற்கு தடுப்புச்சுவர் கட்டக் கோரியுள்ளனர்.