ADDED : ஏப் 15, 2026 07:47 AM
சிவகங்கை: சிவகங்கை அருகேயுள்ள ரோஸ் நகர் ,முல்லை நகரில் மக்கள் வாழ்வதற்கான அடிப்படை வசதிகள் இன்றி மக்கள் வசிப்பதாக குடியிருப்பு வாசிகள் புலம்புகின்றனர்
சிவகங்கைக்கு அருகே புறநகர் பகுதியாக உள்ளது ரோஸ் நகர், முல்லை நகர், அழகு மெய்ஞான புரம்.
இங்கு 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.
இந்த பகுதியில் உள்ள குறுக்கு தெருக்களில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் தார் ரோடு, பேவர் பிளாக் சாலை கிடையாது.
கழிவு நீர் செல்வதற்கு கால்வாய் கிடையாது. மழை காலங்களில் இந்த பகுதி முழுவதும் சேரும் சகதியுமாக காணப்படுகிறது.
இரவு நேரங்களில் தெரு விளக்குகள் எரிவதில்லை. சாலை ஓரங்களில் முட்செடிகள் இருப்பதால் டூவீலரில் கூட செல்ல முடியவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
அந்த பகுதி குடியிருப்பு வாசிகள் கூறுகையில், எங்கள் பகுதியில் முறையான சாலை வசதி கிடையாது.
போடப்பட்டுள்ள மெட்டல் ரோடும் தரம் இல்லாமல் போட்டதால் ரோடு முழுவதும் குண்டும் குழியுமாக கற்கள் பெயர்ந்து கிடக்கிறது.
இந்த பகுதி முழுவதும் கழிவு நீர் செல்வதற்கு கால்வாய் கிடையாது.
வீட்டில் உபயோகப்படுத்தக்கூடிய கழிவு நீர் ரோட்டில் தான் விடப்படுகிறது. அல்லது ரோட்டில் பள்ளம் தோண்டி விடப்படுகிறது.
இதனால் மக்கள் நடந்து போக முடியவில்லை. இந்த பகுதிக்கு குப்பை வாங்க பணியாளர்கள் வருவதில்லை. கடந்த காலங்களில் இந்த பகுதி வாணியங்குடி ஊராட்சியில் இருந்தது.
தற்போது சிவகங்கை நகராட்சியுடன் இணைக்கப்பட உள்ளது. குப்பை வாங்க பணியாளர்கள் வராததால் இங்குள்ள மக்கள் குப்பையை ரோட்டின் ஓரங்களிலும், முல்லை பெரியாறு கால்வாய்களிலும் கொட்டுகின்றனர்.
இந்த பகுதியில் கொசுக்கள் அதிகம் உருவாகி நோய் பரவும் அபாயம் ஏற்படுகிறது.
மாவட்ட நிர்வாகம் ரோஸ் நகர், முல்லை நகர் பகுதியில் உள்ள குறுக்கு தெருக்களில் சாலை வசதி, கழிவு நீர் செல்வதற்கு கால்வாய், தெரு விளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதி செய்து கொடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
