
சிவகங்கை மாவட்டத்தில் செப்., அக்.,மாதங்களில் விவசாயிகள் வேளாண் பணியை தொடங்குவர். அதற்கு முன்னதாக ஜூலை, ஆக., மாதங்களில் பெய்யும் மழையை பயன்படுத்தி நிலத்தை கோடை உழவு செய்து பக்குவப்படுத்தி வைப்பது வழக்கம்.
கடந்த சில தினங்களாக பெய்து வரும் தொடர் மழை காரணமாக சிவகங்கை மாவட்டம் முழுவதும் அந்தந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் வேளாண் பணிகளுக்கு ஏற்றவாறு தங்கள் நிலத்தை உழவு செய்து பக்குவப்படுத்தி வருகின்றனர்.
வரும் நாட்களில் மழை பெய்தால் நெல், மிளகாய், பருத்தி, கம்பு, சோளம், கேழ்வரகு உள்ளிட்டவற்றை விதைத்தல், நடவு செய்தல் பணிகளில் ஈடுபட உள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், அரசு அங்கீகாரம் பெற்ற விதைகள் மற்றும் உர விற்பனை நிலையங்களில் அந்தந்த பகுதி விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம்,பூச்சி மருந்துகளை இருப்பு வைப்பதோடு மானிய விலையில் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மாரத்துார் விவசாயி ராமலிங்கம் கூறுகையில், தற்போது பெய்து வரும் மழை காரணமாக உரிய பருவ காலத்தில் வேளாண் பணிகளை தொடங்கியுள்ளோம்.
இன்னும் ஓரிரு நாட்கள் மழை பெய்தால் கோடை உழவு செய்து பக்குவப்படுத்தி உள்ள நிலத்தில் நெல், மிளகாய்,கேழ்வரகு விதைப்பு பணிகளில் ஈடுபடுவோம். ஆடி பட்டம் தேடி விதைக்க வேண்டும் என்பது முன்னோர் கூறிய கருத்து.
அதனடிப்படையில் வேளாண் பணிகளை தொடங்கினால் நல்ல மகசூல் கிடைக்கும். இந்தாண்டு முழு பலனை எடுக்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது.
விவசாயிகளின் நலன்களை கருத்தில் கொண்டு விதைகள், உரங்கள், பூச்சி மருந்து ஆகியவற்றை எந்தவித தொய்வின்றியும், மானிய விலையில் வழங்குவதற்கு மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

