/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண் தானத்தால் 231 பேருக்கு வாழ்வில் ஒளி
/
கண் தானத்தால் 231 பேருக்கு வாழ்வில் ஒளி
ADDED : ஜன 28, 2025 05:30 AM
சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் கண்தானத்தால் 231 பேருக்கு பார்வைக்கான ஒளி கிடைத்துள்ளது.
தமிழகத்தில் விபத்து மற்றும் நோய் மூலம் கண் பார்வையை இழப்போர் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாகிக்கொண்டே வருகிறது.
ஆனால் இறந்த பின்பு கண் தானம் செய்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவாகவே உள்ளது. கண் தானம் செய்யும் வழிமுறைகள் குறித்து நம்மில் பலருக்கு தெரிவதில்லை. கண் தானம் செய்ய வேண்டும் என்ற மனம் நம்மிடம் இருந்தாலும் அதனை எப்படிச் செய்வது கண் தானம் செய்வதற்கான வழிமுறைகள் என்ன என்பது குறித்து நம்மில் பலருக்கும் தெரிவதில்லை. கண்தானம் கண்ணின் கருவிழி அதாவது கார்னியல் பகுதியைத் தானமாக தருவதாகும். ஒருவர் இறந்த பிறகே அவரின் கண் தானமாகப் பெறப்படுகிறது.
சிறிய வயதினர் முதல் வயது முதிர்ந்தவர்கள் வரை யார் வேண்டுமானாலும் கண்தானம் செய்யலாம். கண்தானம் செய்வதற்கு வயது ஒரு தடையல்ல. தானம் பெறப்பட்ட கண் கருவிழி மாற்று அறுவை சிகிச்சை மூலம் தகுந்த நபருக்குப் பொருத்தப்படுகிறது.
கண்தானம் செய்ய விரும்புவோர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைகளில் பெயரைப் பதிவு செய்து தங்கள் கண்களை தானம் செய்யலாம். பெயர் பதிவு செய்பவர்களுக்குக் கண்தான அட்டை வழங்கப்படுகிறது. இறந்து 4 முதல் 6 மணி நேரத்தில் கண்தானம் செய்யலாம் மருத்துவக் குழு இறந்த நபரின் வீட்டில் சென்று கண்தானம் பெற்றுக்கொள்கின்றனர்.
இரண்டு சாட்சிகள் முன்னிலையில் உறவினரின் எழுத்துப்பூர்வ ஒப்புதலுடன் மட்டுமே கண்தானம் செய்ய முடியும்.
சிவகங்கையில் 2020ல் 23 பேரும், 2021ல் 64, 2022ல் 40, 2023ல் 55, 2024ல் 49 பேரும் என மொத்தம் 231 பேர் கண்தானத்தால் பயன் அடைந்துள்ளனர். 2020 முதல் 2024 வரை 203 பேர் கண்தானம் வழங்கியுள்ளனர்.

