/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தென்னங்கன்று விற்பனை: விவசாயிகள் புகார்
/
தென்னங்கன்று விற்பனை: விவசாயிகள் புகார்
ADDED : ஏப் 27, 2025 07:21 AM
திருப்புவனம் : திருப்புவனம் தோட்டக்கலைத்துறை அலுவலகத்தில் தென்னங்கன்று கேட்டு வரும் விவசாயிகளை தனியார் நர்சரிக்கு செல்லுமாறு அதிகாரிகள் கை காட்டுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
திருப்புவனம் வட்டாரத்தில் தென்னை விவசாயம் பெருமளவு மேற்கொள்ளப்படுகிறது. இப்பகுதியில் ஒன்றரை லட்சம் தென்னை மரங்கள் உள்ளன. நான்கு வழிச்சாலை, புதுப்புது குடியிருப்பு, ஆக்கிரமிப்பு என ஏராளமான தென்னை மரங்கள் வெட்டப்பட்டு விட்டன. விவசாயிகள் பலரும் புதிதாக தென்னை மரங்கள் நடவு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இவர்களுக்கு தோட்டக்கலைத்துறை சார்பில் தென்னங்கன்று வழங்கப்படுகின்றன. முளைப்பு திறன், காய்க்கும் திறன் ஆகியவை பரிசோதிக்கப்பட்டு தோட்டக்கலைத்துறை சான்றுடன் வழங்கப்படும் கன்றுகள் தரமாக இருக்கும். எனவே விவசாயிகள் தோட்டக்கலைதுறை மூலம் விற்பனை செய்யப்படும் தென்னங்கன்றுகளை வாங்க ஆர்வம் காட்டுவார்கள்.
விவசாயிகள் கூறுகையில்:  தோட்டக்கலைத்துறை மூலம் விற்பனை செய்யப்படும் தென்னங்கன்றுகள் தரமாக இருக்கும். நெட்டை ரகங்கள் நான்கு வருடங்களுக்கு பின்னும் குட்டை ரகங்கள் இரண்டு வருடங்களுக்கு பின்னும் காய்க்க தொடங்கும், ஆனால் தோட்டக்கலைத்துறையில் ஒரு தென்னங்கன்று 130 ரூபாய். தனியாரிடம் 75 ரூபாய் தான்.
ஆனால் முளைப்புத்திறன் கேள்விக்குறி தான். திருப்புவனம் தோட்டக்கலைத்துறையில் பணியாற்றும் சிலர் மானாமதுரையில் உள்ள நர்சரி ஒன்றிற்கு சென்றால் குறைந்த விலையில் தென்னங்கன்றுகள் வாங்கலாம் என திருப்பி விடுகின்றனர்.
மாவட்ட நிர்வாகம் விவசாயிகளை திசை திருப்புவர்கள் மீது கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

