/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
சாக்கடை கால்வாயாக மாறும் சுப்பன் கால்வாய் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
/
சாக்கடை கால்வாயாக மாறும் சுப்பன் கால்வாய் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
சாக்கடை கால்வாயாக மாறும் சுப்பன் கால்வாய் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
சாக்கடை கால்வாயாக மாறும் சுப்பன் கால்வாய் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் புகார்
ADDED : ஏப் 26, 2025 06:17 AM

சிவகங்கை  மாவட்டத்தில் ஓடும் சுப்பன் கால்வாயில், கழிவு நீர் அதிகளவில் கலப்பதால், சாக்கடை கால்வாயாக மாறி வருவதாகவும், இதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிவகங்கையில் நடந்த விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் புகார் தெரிவித்தனர்.
சிவகங்கை கலெக்டர்அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் வானதி  முன்னிலை வகித்தனர்.
வேளாண் பல்கலை துறை தலைவர் பாபு, மாவட்ட வழங்கல் அலுவலர் சபிதாள் பேகம், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன் குமார், கோட்டாட்சியர் விஜயகுமார் பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
அய்யாச்சாமி, கீழநெட்டூர்: கீழநெட்டூரில் சாலை விரிவாக்கத்தின்போது ராமநாதபுரம் கூட்டு குடிநீர் திட்ட குழாய்களை சேதப்படுத்தி விட்டனர். அதற்கு பின் பெரும்பாலான கிராமங்களுக்கு குடிநீர் வராததை குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் கண்டு கொள்வதே இல்லை.
கலெக்டர்: அடுத்த மாத இறுதி அல்லது ஜூன் முதல் வாரத்தில் குடிநீர் குழாய் சீரமைக்கப்பட்டு, தடையின்றி குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
கருப்பையா, சிறுசெங்குளிபட்டி: முத்துார் வாணியங்குடி கிராமத்தில் வி.ஏ.ஓ.,விற்கு அலுவலகம் இருந்தும், அங்கு தங்காமல் நாட்டரசன்கோட்டையில் அலுவலகம் செயல்படுகிறது.
வீரபாண்டி, மானாமதுரை: மானாமதுரை, திருப்புவனம் பகுதி சுப்பன் கால்வாயில் வீடு, ஓட்டல்களில் இருந்து வெளியேறும் கழிவு நீரை விடுவதால், கால்வாய் சாக்கடையாகி விட்டது.
ராமநாதன், தேவகோட்டை: முப்பையூர் அருகே கீழக்கோட்டையில் ரூ.10 லட்சத்தில் 300 மீட்டர் துாரத்திற்கு போடப்பட்ட தார் ரோடு தரமின்றி உள்ளது. இதன் மீது விசாரணை நடத்த வேண்டும்.
கலெக்டர்: ஊரக வளர்ச்சி முகமை உதவி செயற்பொறியாளரின் நேரடி விசாரணைக்கு உத்தரவிடுகிறேன்.
கார்த்திகேயன், சிங்கம்புணரி: சிங்கம்புணரி விவசாயிகள் பயன்பெறும் வகையில் முல்லை பெரியாறு அணை தண்ணீரை சிங்கம்புணரி கால்வாயில் விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஜெயகுணசேகரன், கல்லல்: மணிமுத்தாறு ஆற்றில்ஓடும் தண்ணீர் மருதங்கண்மாயை நிரப்பி செல்லும். எனவே தண்ணீரை தேக்கும் விதமாக மருதங்கண்மாயில் தடுப்பணை கட்டித்தர வேண்டும். கண்மாயில் நீர்சேகரமின்றி 600 ஏக்கர் நிலம் பாலைவனமாகி வருகிறது.
ஜான் சேவியர், சாலைக்கிராமம்: சாலைக்கிராமத்தில் உள்ள கங்கை ஊருணியை துார்வாரி, மடைகள் கட்டி பராமரிக்க வேண்டும். அதே போன்று மாரக்குளம் கண்மாயை சுற்றி தடுப்புச்சுவர் கட்டித்தர வேண்டும்.
அய்யாச்சாமி, கீழநெட்டூர்: மாவட்டத்தில் பெரும்பாலான இடங்களில் அமைத்துள்ள மழை மானிகள் சரியாக இயங்குவதே இல்லை. இதை புள்ளியல் துறையினர் எப்படி கணக்கிட்டு மழை அளவை குறிக்கின்றனர்.
கலெக்டர்: மாவட்ட அளவில் புதிதாக சாட்லைட் வசதியுடன் கூடிய மழை மானிகள் அதிகளவில் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் கூடுதலாக மழை மானிகள் கேட்டால் அரசிடம் ஒப்புதல் பெற்று அமைத்து தரப்படும். சாட்லைட் மூலம் இயங்கும் மழை மானி தானாகவே மழைஅளவை குறிப்பிட்டு அளிக்கும்.
ராதாகிருஷ்ணன், பெரிய கண்ணனுார்: சிவகங்கையில் இருந்து பெரியகண்ணனுார் அதப்படக்கி, ஆல்பட்ட விடுதி, கலசாங்குடி வழியாக அரசு பஸ்களை இயக்க வேண்டும். மேலும் சிவகங்கையில் இருந்து பெரியகண்ணனுாருக்கு கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும்.
முருகேசன், திருப்புவனம்: திருப்புவனம் பகுதி வயல்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உயர்த்தி கட்ட மின்வாரியத்திடம் பல முறை புகார் செய்தும்நடவடிக்கை எடுக்கவில்லை.
சந்திரசேகரன், தேவகோட்டை: மாவட்ட அளவில் பெரும்பாலானகுடிநீர் மேல்நிலை தொட்டிகள் குளோரினேஷன் செய்வதே இல்லை. கோடை காலத்தில் குடிநீரால் நோய் பரவுவதை தடுக்க, தொட்டிகளை சுத்தம் செய்ய வேண்டும்.
கலெக்டர்: அந்தந்த பி.டி.ஓ.,க்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி, குடிநீர் மேல்நிலை தொட்டிகளை முறையாக சுத்தம் செய்து வைக்க வேண்டும் என உத்தரவிடப்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது.

