/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
பெரியாறு பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை
/
பெரியாறு பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை
பெரியாறு பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை
பெரியாறு பாசன கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்க விவசாயிகள் கோரிக்கை
ADDED : நவ 24, 2024 07:53 AM
சிவகங்கை : சிவகங்கை மாவட்டத்தில் பெரியாறு பாசனத்தில் உள்ள 129 கண்மாய்களுக்கும் முறையாக தண்ணீர் வழங்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சிவகங்கை மாவட்டத்தில் ஷீல்டு, லெசிஸ், 48 வது மடை கால்வாய், கட்டாணிப்பட்டி 1 மற்றும் 2 ஆகிய 5 நேரடி பெரியாறு பாசனக் கால்வாய்கள் மூலம் 136 கண்மாய்களுக்குட்பட்ட 6,038 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அதேபோல் மாணிக்கம் கால்வாய், மறவமங்கலம் உள்ளிட்ட விஸ்தரிப்பு மற்றும் நீட்டிப்பு கால்வாய் மூலம் 332 கண்மாய்களுக்குட்பட்ட 8 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பாசன வசதி பெறுகின்றன.
பெரியாறு ஒரு போக பாசனத்தில் கடைமடை பகுதியாக இருப்பது சிவகங்கை மாவட்டமாகும். பெரியாறு தண்ணீர் செப்.19ம் தேதி சிவகங்கை பகுதிக்கு திறக்கப்பட்டது.
திறக்கப்பட்ட தண்ணீர் ஷீல்டு கால்வாயில் 3 கண்மாய்களுக்கும், லெசிஸ் கால்வாயில் 6 கண்மாய்களுக்கும், 48 வது மடைக்கால்வாயில் 4 கண்மாய்களுக்கும், கட்டாணிப்பட்டி 1 மற்றும் 2 கால்வாயில் 7 கண்மாய்களுக்கும் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாகவும் மீதமுள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் வழங்கப்படவில்லை எனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர். திருமலை விவசாயி அய்யனார் கூறுகையில், பெரியாறு பாசன தண்ணீரை நம்பித்தான் இந்த பகுதி மக்கள் நடவு பணியை செய்துள்ளனர். தற்போது பெய்த மழையால் ஓரளவு தண்ணீர் உள்ளது.
ஆனால் இந்த மழை நீரை வைத்து பயிரை காப்பாற்ற முடியாது. எங்களுக்கு வழங்க வேண்டிய தண்ணீரை முறையாக வழங்கினால் தான் இந்த முறை பயிரை காப்பாற்ற முடியும்.
இது குறித்து பல முறை கலெக்டரிடம் புகார் அளித்துவிட்டோம். எங்கள் பகுதிக்கு வழங்க வேண்டிய பெரியாறு தண்ணீரை முறையாக வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.