/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இலவச விவசாய மின் இணைப்பிற்கு பல ஆண்டு காத்திருப்பு சிவகங்கையில் விவசாயிகள் புகார்
/
இலவச விவசாய மின் இணைப்பிற்கு பல ஆண்டு காத்திருப்பு சிவகங்கையில் விவசாயிகள் புகார்
இலவச விவசாய மின் இணைப்பிற்கு பல ஆண்டு காத்திருப்பு சிவகங்கையில் விவசாயிகள் புகார்
இலவச விவசாய மின் இணைப்பிற்கு பல ஆண்டு காத்திருப்பு சிவகங்கையில் விவசாயிகள் புகார்
ADDED : செப் 28, 2024 05:50 AM

சிவகங்கை: சிவகங்கை மாவட்டத்தில் விவசாய நிலங்களுக்கு இலவச மின் இணைப்பு கேட்டு விண்ணப்பித்து, பல ஆண்டுகளாக காத்திருந்தும் இணைப்பு கிடைக்கவில்லை என விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அனைத்து விவசாயிகளும் புகார் தெரிவித்தனர்.
சிவகங்கையில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. கலெக்டர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். தேவகோட்டை சப்- கலெக்டர் ஆயுஷ் வெங்கடேஷ் வட்ஸ் முன்னிலை வகித்தார். வேளாண்மை இணை இயக்குனர் லட்சுமி பிரபா வரவேற்றார். மாவட்ட வருவாய் அலுவலர் செல்வசுரபி, கோட்டாட்சியர் விஜயகுமார், கூட்டுறவு இணை பதிவாளர் ராஜேந்திர பிரசாத், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் உமாமகேஸ்வரி, பொது மேலாளர் ஜெயப்பிரகாஷ், குன்றக்குடி வேளாண் அறிவியல் நிலைய தலைவர் செந்துார் குமரன், முன்னோடி வங்கி மேலாளர் பிரவீன்குமார்பங்கேற்றனர்.
கூட்டத்தில் நடந்த விவாதம்:
சந்திரன், விவசாயி, சிவகங்கை: காளையார்கோவில் ஒன்றியம் பெரியகண்ணனுார், ஆலங்குடி கால்வாயில் சேதமான ஷட்டர்களை புதுப்பிக்க வேண்டும்.
பாரத்ராஜா, விவசாயி, திருப்புவனம்: திருப்புவனம் பேரூராட்சியில், தெருவிற்கு நடுவே வைத்துள்ள மின்கம்பங்களை மாற்றி அமைக்க, செலவின தொகை கேட்கின்றனர்.
கலெக்டர்: மின்விளக்கை மாற்றி அமைக்க பேரூராட்சி அதற்கான செலவின தொகையை மின்வாரியத்திற்கு செலுத்த வேண்டும்.
விஸ்வநாதன், இந்திய கம்யூ., சிவகங்கை: விவசாயிகள் இலவச மின் இணைப்பு கேட்டு 2022ம் ஆண்டில் இருந்து காத்திருக்கின்றனர். விரைந்து வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: ஏராளமான விண்ணப்பங்கள் நிலுவையில் இருப்பதாக தெரிவிக்கின்றனர். இது குறித்து அரசின் கவனத்திற்கு கொண்டு சென்று, இலவச மின் இணைப்பு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அய்யாச்சாமி, விவசாயி, கீழநெட்டூர்: மானாமதுரை துணை மின்நிலையத்தில் இருந்து மின் சப்ளை செய்வதில் ஏற்படும் சிரமத்தை தவிர்க்க, நல்லாண்டிபுரத்தில் புதிய துணை மின் நிலையம் துவக்க வேண்டும். இல்லாவிடில் தெ.புதுக்கோட்டை வழியாக மின் இணைப்புகளை மாற்றி அமைத்து, தடையின்றி மின்சாரம் சப்ளை செய்ய வேண்டும்.
கருப்பையா, நீர்பாசன சங்க தலைவர், செங்குளிபட்டி: முத்துாரில் கிராவல் மண் எடுப்பவர்கள், விதிகளை மீறி கண்மாய் பகுதியிலும் மண் எடுப்பதால், நீர்பிடிப்பு பாதிக்கப்படும். இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கலெக்டர்: கிராவல் மண் எடுப்பவர்கள் விதிகளை மீறி செயல்பட்டால், அவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என சிவகங்கை கோட்டாட்சியருக்கு உத்தரவிடுகிறேன்.
வெள்ளை, விவசாயி, தஞ்சாக்கூர்: மாரநாடு பெரிய கண்மாய் மூலம் 4,000 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும். இக்கண்மாயிலும், வரத்து கால்வாயில் முட்புதர் மண்டிக்கிடக்கிறது. உடனே அகற்ற வேண்டும்.
ராமலிங்கம், விவசாயி, தமறாக்கி: விவசாய கிணறுகளில் உள்ள மின் இணைப்புகளை மின்வாரியத்தினர் கணக்கீடு செய்கின்றனர். இதனால், விவசாய இலவச மின் இணைப்பிற்கு பாதிப்பு ஏற்பட்டுவிடக்கூடாது.
கலெக்டர் : மின்வாரியம் நடத்தும் இக்கணக்கெடுப்பால், விவசாய மின்இணைப்பிற்கு எந்தவித பாதிப்பும் இருக்காது. அதே நேரம், இலவச மின் இணைப்பு பெற்று, வர்த்தக நோக்கில் பயன்படுத்துவதை தான் கணக்கில் எடுத்து நடவடிக்கை எடுப்பார்கள்.
ஆதிமூலம், விவசாயி, திருப்புவனம்: விளைச்சல் குறைந்த தென்னை மரங்களை அகற்றி, புதிய தென்னை கன்றுகள் வைக்க ஊக்கவிக்க வேண்டும். கொப்பரை கொள்முதல் கால அளவை நீட்டிக்க வேண்டும்.
ராஜேந்திர பிரசாத், இணை பதிவாளர்: கூட்டுறவு கடன் சங்கங்கள் மூலம் 14,101 விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு, ரூ.1.16 கோடி வரை பயிர் இன்சூரன்ஸ் தொகை வரவு வைக்கப்பட்டுள்ளன. மேலும், கல்லல், மித்ராவயல் தொடக்க கூட்டுறவு கடன் சங்கத்தின் மூலம் 186 விவசாயிகளுக்கு ரூ.36.88 லட்சம் பயிர் இழப்பீடு தொகை வரவு வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விவாதம் நடந்தது.