/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
.வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
/
.வாழை சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம்
ADDED : ஏப் 21, 2025 06:14 AM

திருப்புவனம், திருப்பாச்சேத்தி, கலியாந்தூர், நயினார்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாட்டு வாழை, ஒட்டு வாழை உள்ளிட்டவைகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. பெரும்பாலும் முகூர்த்த நாட்களை கணக்கிட்டு நாட்டு வாழை சாகுபடி செய்யப்படுகிறது.
ஏக்கருக்கு 900 முதல் ஆயிரம் கன்றுகள் வரை நடவு செய்யப்படுகிறது. நடவு செய்த 10வது மாதம் முதல் பக்க கன்றுகள் மூலம் வாழை இலை அறுவடை செய்யப்படும்.
அதன்பின் வாழை காய்கள், வாழை மரங்கள் விற்பனை செய்யப்படும். பக்க கன்றுகள் மூலம் வாழை இலை அறுவடை செய்யப்படுவதால் பலரும் நாட்டு வாழை, ஒட்டு வாழையையே சாகுபடி செய்கின்றனர். முதன் முதலாக மழவராயனேந்தல் பகுதியில் ரஸ்தாளி வாழை சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
செலவு அதிகரித்தாலும் லாபம் அதிகம் என்பதால் ஒருசில விவசாயிகள் ரஸ்தாளி வாழை சாகுபடியை தொடங்கியுள்ளனர். ஏக்கருக்கு ஆயிரத்து 400 கன்றுகள் வரை நடவு செய்கின்றனர். நெருக்கம் நெருக்கமாக நடவு செய்வதால் களை வராது.
மேலும் பக்க கன்றுகளை வளரவிடாமல் வெட்டி விடுவதாலும் ரஸ்தாளி வாழை சற்று உயரமாக வளர்வதாலும் ரஸ்தாளி வாழை சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர்.
ஏக்கருக்கு ரூ.7 லட்சம் லாபம்
இது குறித்து விவசாயி முத்துசாமி கூறியதாவது, ஏக்கருக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் வரை செலவாகும்.
நோய் தாக்குதல் குறைவு, இலை அறுவடை செய்ய முடியாது. ரஸ்தாளி பழங்கள் தான் அறுவடை செய்ய முடியும், ரஸ்தாளி மரம் உயரமாக வளர்வதால் 80 முதல் 150 காய்கள் வரை இருக்கும்.
ரஸ்தாளி பழங்களின் விலை அதிகம் என்பதால் லாபமும் அதிகரித்து காணப்படும். ஏக்கருக்கு ஐந்து முதல் ஏழு லட்ச ரூபாய் வரை கிடைக்கும் என்பதால் ரஸ்தாளி பயிரிட்டு தற்போது அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளது, என்றார்.

