/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கருகும் பயிரை காப்பாற்ற போராடும் விவசாயிகள்
/
கருகும் பயிரை காப்பாற்ற போராடும் விவசாயிகள்
ADDED : ஜன 07, 2024 04:32 AM

சிவகங்கை: காளையார்கோயில் அருகே உள்ள மாவிலங்கை கிராமத்தில் பயிர்களை காப்பாற்ற கண்மாய் தண்ணீரை பம்ப் செட் மூலம் விவசாயிகள் பாய்ச்சி வருகின்றனர்.
காளையார் கோவில் ஒன்றியம் சேதம்பால் ஊராட்சி மாவிலங்கை கிராமத்தில் 80க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கிராமத்தில் உள்ள மக்கள் கண்மாய் தண்ணீரை பயன்படுத்தி விவசாயம் செய்து வருகின்றனர். மாவிலங்கை கண்மாயில் தற்போது பராமரிப்பு பணி நடந்து வருகிறது. கண்மாய் மடைகளை பொதுப்பணித்துறையினர் சீரமைத்து வருகின்றனர்.
புதிதாக கட்டப்பட்டுள்ள மடைகளும் கண்மாய் மட்டத்தை விட உயர்வாக இருப்பதால் தண்ணீர் பாய்ச்சுவது சிரமமாக உள்ளது. கிராமத்தில் உள்ள விவசாயிகள் பம்ப் செட் மூலம் கண்மாயில் உள்ள தண்ணீரை விவசாயத்திற்கு பாய்ச்சி வருகின்றனர்.
விவசாயி காயாம்பு கூறுகையில், நான் இரண்டரை ஏக்கரில் நெல் விவசாயம் செய்து வருகிறேன். ஏக்கருக்கு 24 ஆயிரம் ரூபாய் செலவு செய்துள்ளேன். போதிய மழை இல்லாததால் கண்மாய் தண்ணீரை மோட்டார் மூலம் பாய்ச்சி பயிரை காப்பாற்றுகிறோம். ஒரு தடவை தண்ணீர் மோட்டார் மூலம் பாய்சுவதற்கு ஏக்கருக்கு 2000 ரூபாய் செலவாகிறது. இன்னும் 4 முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டியுள்ளது.
கண்மாயில் தண்ணீர் இருப்பு குறைவாக உள்ளது. பயிர்கள் கருகும் சூழல் உள்ளது. தை கடைசியில் தான் அறுவடை செய்வோம். அதுவரைக்கு இந்த பயிரை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்ற சூழலில் தண்ணீரை விலைக்கு வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம் என்றார்.