ADDED : ஜன 23, 2025 04:19 AM

தேவகோட்டை: தேவகோட்டையில் இருந்து கண்ணங்குடி செல்லும் சாலையில் ரோட்டோரமும், கால்வாய் ஓரமும் 15 க்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் நீண்ட நாட்களாக சாய்ந்து நிற்கின்றன.
கால்வாயில் மண் சரிவு ஏற்படும் போது மின் கம்பங்கள் தொடர்ந்து சாய்ந்து வருகிறது. இந்த நிலையில் சித்தானுார் அருகே மெயின் ரோட்டில் சுற்றிலும் நெற்பயிர்களுடன் ஒரு வீடு உள்ளது. வீட்டோடு இருக்கும் வயல் வெளியில் மின் கம்பம் மிகவும் சாய்ந்து விட்டது. அந்த வழியாக மின்கம்பிகள் மிகவும் தாழ்வாக செல்கின்றன. மேலும் வீட்டிற்கு செல்லும் மின்சார கம்பியும் தொட்டு விடும் உயரத்தில் உள்ளது.
மெயின் ரோட்டில் உள்ள முக்கிய மின்கம்பமும் சாய்ந்து வருவதால் இதில் இருந்து வயலுக்குள் உள்ள சாய்ந்த மின்கம்பத்திற்கு செல்லும் மின் கம்பிகளும் தாழ்வாகவே செல்கின்றன. மின் கம்பி தாழ்வாக வருவதால் வயலில் இறங்கி விவசாய பணிகள் அச்சத்துடனே செய்யும் நிலை உருவாகி வருகிறது. மின் வாரியத்தினர் மின் கம்பங்களை சரி செய்ய வேண்டும் என கிராமத்தினர் விரும்புகின்றனர்.

