கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் பார்வையிட கட்டணம் நிர்ணயம்
கீழடி திறந்த வெளி அருங்காட்சியகம் பார்வையிட கட்டணம் நிர்ணயம்
ADDED : பிப் 15, 2026 05:09 AM
கீழடி: கீழடி திறந்த வெளி அருங்காட்சியகத்தில் சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும் என சுற்றுலா பயணிகள் வலியுறுத்தியுள்ளனர். பார்வையாளர்கள் பார்வையிட கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கீழடியில் மத்திய மாநில தொல்லியல் துறையினர் அகழாய்வு செய்த நான்கரை ஏக்கர் நிலத்தில் 65 ஆயிரத்து 380 சதுடி அடி பரப்பளவில் 48 அகழாய்வு குழிகள் திறந்த வெளி அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது.
முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இரண்டு அரங்குகளாக உள்ள திறந்த வெளி அருங்காட்சியகத்தில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை. திறந்த வெளி அருங்காட்சியகம் தென்னந்தோப்பிற்கு மத்தியில் உள்ளது. சுற்றுலா பயணிகள் நீண்ட துாரம் நடந்து சென்று தான் திறந்த வெளி அருங்காட்சியகத்தை காண முடியும், ஆனால் எந்த இடத்திலும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படவில்லை.
திறந்த வெளி அருங்காட்சியத்தில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும், மேலும் திறந்த வெளி அருங்காட்சியகம் நீண்ட துாரம் இருப்பதால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள் அருங்காட்சியகத்தை கண்டு ரசிக்க சக்கர நாற்காலி ஏற்பாடு செய்ய வேண்டும்.
திறந்த வெளி அருங்காட்சியகத்தின் நுழைவுப்பகுதியில் மட்டும் குடிநீர் வசதி செய்யப் பட்டுள்ளது.
அருங்காட்சியக வளாகத்தில் மேலும் கூடுதலாக குடிநீர் வசதி செய்து தர வேண்டும். திறந்த வெளி அருங்காட்சியகம் இரண்டு அரங்குகளாக அமைக்கப்பட்டுள்ள நிலையில் ஒரு அரங்கத்தில் இருந்து மற்றொரு அரங்கம் செல்ல நீண்ட தாழ்வாரம் போன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தாழ்வார வளாகத்தின் இருபுறமும் உள்ள தடுப்புகளில் உயிர் எழுத்துகளான அ முதல் ஔ வரை பொறித்துள்ளது வரவேற்பை பெற்றுள்ளது.
கட்டணம் நிர்ணயம்: பெரியவர் 20, சிறியவர் 10, மாணவர்கள் 5, வெளிநாட்டினர் பெரியவர் 50, சிறியவர் 25, போட்டோ 30, வீடியோ 100. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை, சனி, ஞாயிறு காலை 10:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை பார்வையிட அனுமதி. செவ்வாய் வார விடுமுறை.
