/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கீழடியில் வர்ணம் தீட்டிய பானைகள் கண்டெடுப்பு
/
கீழடியில் வர்ணம் தீட்டிய பானைகள் கண்டெடுப்பு
ADDED : அக் 07, 2024 05:13 AM

கீழடி: சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே கீழடி பத்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த வர்ணம் தீட்டிய பானைகளின் பயன்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய தொல்லியல் ஆய்வாளர்கள் முடிவு செய்துள்ளனர்.
கீழடியில் பத்தாம் கட்ட அகழாய்வு ஜூன் முதல் நடந்து வருகிறது. இதுவரை ஒன்பது குழிகள் தோண்டப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொருட்கள் கண்டறியப்பட்டன. 10ம் கட்ட அகழாய்வில் சுடுமண் பானைகள் அதிகளவில் கிடைத்து வருகின்றன.
தற்போதைய அகழாய்வில் மூன்று வர்ணம் தீட்டிய பானைகளும், வர்ணம் தீட்டப்படாத பானைகளும் கண்டறியப்பட்டுள்ளன. வர்ணம் தீட்டிய பானைகளில் ஒரே ஒரு பானையை தவிர மற்ற பானைகளை பண்டைய கால மக்கள் கலைநயத்துடன் வடிவமைத்துள்ளனர்.
ஒரு பானையின் மேற்புற வெளிப்பகுதியில் 2 வட்ட கோடுகள், கீழ்பகுதியில் 3 வட்ட கோடுகள் காணப்படுகின்றன. மற்றொரு பானையின் வெளிப்புற நடுப்பகுதியில் 3 வட்டகோடுகளின் நடுவே இலைகள் வரையப்பட்டுள்ளன. இரண்டாயிரத்து 600 ஆண்டுகளுக்கு முன்பே சுடுமண் முத்திரைகள் கண்டறியப்பட்டுள்ளதால் பானைகளிலும் அச்சுகளை வைத்து வரைந்திருக்கலாம்.
கீழடி அகழாய்வில் கிடைத்த ஒரு சில பானைகள் அடர்சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. எனவே இதில் குறிப்பிடத்தக்க பொருட்கள் வைத்திருக்க வாய்ப்புள்ளது.
வர்ணம் தீட்டப்படாத பானைகளை சமையலுக்கும், தண்ணீர் வைத்திருக்கவும் பயன்படுத்தியிருக்கின்றனர்.
கீழடி அகழாய்வு பணிகளில் மதுரை காமராஜர் பல்கலை கழக மரபணு பிரிவும் இணைந்திருந்தது.
எனவே பத்தாம் கட்ட அகழாய்வில் கிடைத்த பொருட்களை மரபணு பரிசோதனை மேற்கொண்டு தெரிவித்தால் அதனுடைய உண்மையான பயன்பாடு தெரியவரும். இதுவரை நடந்த அகழாய்வில் கிடைத்த பானைகளில் கரிமப்பகுப்பாய்வு மேற்கொண்ட போது அரிசி, உளுந்து, சோளம், தினை உள்ளிட்ட உணவுப்பொருட்களை பயன்படுத்தியிருப்பது தெரியவந்தது.
எட்டு, ஒன்பது, பத்து கட்ட அகழாய்வில் கிடைத்த சுடுமண் பானைகளிலும் மரபணு பரிசோதனை மேற்கொண்டால் கூடுதல் தகவல்கள் கிடைக்கும் என தெரிவிக்கின்றனர்.