ஒரு படி அயிரை மீன் ரூ.2 ஆயிரம் முன்பதிவு செய்யும் மீன் பிரியர்கள்
ஒரு படி அயிரை மீன் ரூ.2 ஆயிரம் முன்பதிவு செய்யும் மீன் பிரியர்கள்
ADDED : ஜன 22, 2026 05:33 AM

மானாமதுரை: மானாமதுரை வைகை ஆற்று பகுதியில் பிடிக்கப்படும் அயிரை மீன் ஒரு படி ரூ. 2 ஆயிரத்திற்கு விற்பனை செய்தாலும் முன்பதிவு செய்து மீன் பிரியர்கள் போட்டி, போட்டு வாங்கிச் செல்கின்றனர்.
அயிரை மீன் அதிக ருசி என்பதால் மீன் பிரியர்கள் மத்தியில் கிராக்கி உள்ளது. சீசன் காலங்களில் கண்மாய்களில் கிடைக்கும் ஜிலேபி கெண்டை, விரால், வெளிச்சி, கெளுத்தி போன்ற மீன்களுக்கு கிராக்கி அதிகமாகவே இருக்கும்.அயிரை மீனைத் தவிர மற்ற மீன்கள் விலை குறைவாக விற்பனை செய்யப்படும்.
தற்போது வைகை ஆற்றுப்பகுதியில் மணற்பரப்பு இல்லாத காரணத்தினால் அயிரை மீன்கள் வரத்து மிகவும் குறைந்து விட்ட நிலையில் அதன் விலை பன்மடங்காக உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கடந்த மாதம் மானாமதுரை வைகை ஆற்றில் குடிநீர் மற்றும் விவசாய தேவைக்காக தண்ணீர் திறந்து விட்ட நிலையில் தற்போது ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் வலையை கொண்டு பிடிக்கப்படும் அயிரை மீன் கால் படி ரூ.500க்கும்,ஒரு படி ரூ.2 ஆயிரத்திற்கும் விற்பனை செய்தாலும் கடுமையான கிராக்கி உள்ளதால் அயிரை மீன் விற்பனை செய்பவர்களிடம் முன்கூட்டியே சொல்லி வைத்தால் தான் கிடைத்து வருகிறது.
இது குறித்து பட்டத்தரசி மீன் பிடிக்கும் தொழிலாளி வேலு கூறியதாவது: அயிரை மீனுக்கு ருசி அதிகம் என்பதால் மீன் பிரியர்கள் இதனை விரும்பி வாங்கி வருகின்றனர். வைகை ஆற்றில் தற்போது மணற்பரப்பு இல்லாமல் இருப்பதால் மீன் வரத்து முற்றிலும் குறைந்து விட்டது. அதிகாலை 4:00 மணிக்கு சென்று 10:00 மணி வரை வலையை வைத்து மீன் பிடிக்கும் போது அரைப்படி அல்லது முக்கால் படி தான் கிடைக்கும்.இதனை பிடிப்பதற்கு 2 பேர் தேவைப்படும் நிலையில் வருமானமாக ரூ. 1500லிருந்து ரூ.2 ஆயிரம் கிடைத்து வருகிறது. அயிரை மீன் தேவைப்படுபவர்கள் முன்கூட்டியே எங்களிடம் சொல்லி வைத்து விடுவர். ஒரு நாளைக்கு 2 பேருக்கு மட்டுமே விற்பனை செய்யும் அளவிற்கு மீன் கிடைத்து வருவதாக தெரிவித்தார்.
