/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
மானாமதுரையில் மீன்பிடி வலை: விற்பனை மும்முரம்
/
மானாமதுரையில் மீன்பிடி வலை: விற்பனை மும்முரம்
ADDED : ஜன 20, 2025 05:17 AM
மானாமதுரை: மானாமதுரை, இளையான்குடி சுற்றுவட்டார பகுதிகளில் ஆறு,கண்மாய் மற்றும் நீர் நிலைகளில் கிடைக்கும் மீன்களை பிடிப்பதற்காக வலைகள் விற்பனை மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
மானாமதுரையில் வைகை ஆற்றில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக தண்ணீர் சென்று வருவதினாலும், மேலும் தடுப்பணைகள், ஏரிகள், குளங்கள், கண்மாய்கள் மற்றும் நீர் நிலைகளில் தண்ணீர் கிடப்பதினாலும் அதில் மீன்கள் அதிகளவில் இருப்பதினால் அதனை பிடிப்பதற்காக ஏராளமானோர் சேலை, வேஷ்டி மற்றும் பல்வேறு வகையான வலைகளை கொண்டு மீன்களை பிடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நீர்நிலைகளில் கிடைக்கும் மீன்களை அதிகளவில் பிடிப்பதற்காக பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட மீன்பிடி வலைகளை ஏராளமானோர் மானாமதுரை, இளையான்குடி பகுதிகளில் விற்பனை செய்து வருகின்றனர்.
வலைகளை விற்பனை செய்யும் மதுரை குமார் கூறியதாவது, ஆறு, கண்மாய்கள், குளங்கள் போன்ற நீர் நிலைகளில் கிடக்கும் ஜிலேபி,கெளுத்தி, கெண்டை,விலாங்கு மற்றும் அயிரை மீன்களை பிடிப்பதற்காகவே பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட வலைகளை கடந்த ஒரு மாத காலமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் விற்பனை செய்து வருகிறோம்.
தற்போது அனைத்து நீர் நிலைகளிலும் தண்ணீர் கிடப்பதினால் மீன்களின் வரத்து அதிகமாக இருக்கும் என்பதால் ஏராளமான வலைகளை விற்பனைக்காக கொண்டு சென்று வருகிறேன்.
வலைகளின் அளவுக்கு தகுந்தாற்போல் சிறிய வலை, ரூ.250லிருந்து ரூ.350வரையிலும், பெரிய வலை, ரூ.400லிருந்து ரூ.600 வரைக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
கடல் மீன்களை விட கண்மாய் மற்றும் ஆற்று மீன்களுக்கு ருசி அதிகம் என்பதால் இதனை படிப்பதற்காக ஏராளமானோர் வலைகளை ஆர்வமுடன் வாங்கிச் சென்று வருவதாக கூறினார்.