/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
தமிழக ஜல்லிக்கட்டு களத்தில் காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் இலங்கை முன்னாள் அமைச்சர்
/
தமிழக ஜல்லிக்கட்டு களத்தில் காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் இலங்கை முன்னாள் அமைச்சர்
தமிழக ஜல்லிக்கட்டு களத்தில் காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் இலங்கை முன்னாள் அமைச்சர்
தமிழக ஜல்லிக்கட்டு களத்தில் காளைகளுக்கு பயிற்சி அளிக்கும் இலங்கை முன்னாள் அமைச்சர்
ADDED : டிச 31, 2024 06:20 AM

சிவகங்கை : ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்க, சிவகங்கை அருகே சொக்கநாதபுரம் பண்ணையில் இலங்கை முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமானுக்கு சொந்தமான காளைகளுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது.
இலங்கை தொழிலாளர் காங்., தலைவராக செந்தில் தொண்டமான் உள்ளார். இவர் அந்நாட்டில் முன்னாள் கிழக்கு மாகாண கவர்னர், முதல்வர், அமைச்சர் பதவி வகித்துள்ளார். இவர் சொந்த ஊரான சிவகங்கை அருகே சொக்கநாதபுரத்தில் உள்ள பண்ணையில் காங்கேயம், புலிக்குளம், கண்ணாவரம், இடிச்சாலி, மலைமாடு, ஆந்திரா (கிர் வகை) வகைகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட காளைகளை வளர்க்கிறார்.
தை பொங்கலை முன்னிட்டு, தமிழகத்தில் பல பகுதிகளில் நடக்கும் ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு போட்டிகளில் இக்காளைகளை பங்கேற்க செய்வார். இதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் தொண்டமான் தன் பண்ணையில் உள்ள அனைத்து காளைகளுக்கும் மருத்துவ பரிசோதனை செய்து, களத்தில் நின்று விளையாட வீரர்கள் மூலம் பயிற்சி அளித்து வருகிறார்.
பண்ணையிலிருந்து ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டில் பங்கேற்க காளைகளை எளிதாக அழைத்து செல்ல, 'ஹைட்ராலிக்' இயந்திர கதவுடன் கூடிய தனி மினி வாகனத்தையும் தயாரித்துள்ளார்.
இவரது காளைகளுக்கு பீமா, புலி விரட்டி உள்ளிட்ட பெயர்கள் உள்ளன. இது தவிர காளைகள் மாடுபிடி வீரர்களை எளிதில் குத்தி வீச ஏதுவாக, செயற்கை மனித பொம்மையை களத்தில் நிறுத்தி, அவற்றிற்கு தனியாகவும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
களத்தில் இருந்து செல்லும் காளைகளை எளிதில் கண்டறிய கழுத்து பட்டையில் 'ஜி.பி.ஆர்.எஸ்.,' கருவியும் பொருத்தப்படுகிறது.
பேரிச்சம்பழம், முட்டை சாப்பிடும் காளைகள்: இக்காளைகளுக்கு சோளம், கம்பு, கேப்பை, பருத்தி கொட்டையுடன் பேரிச்சம்பழம், 1 லிட்டர் பசும்பால், நாட்டு கோழி முட்டை உள்ளிட்டவையும் வழங்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு களத்தில் இளைப்பின்றி நின்று விளையாட நீச்சல், ஓட்டம், மண் குத்துதல் உள்ளிட்ட பயிற்சிகளும் அளிக்கப்படுகிறது.
இக்காளைகள் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் நடந்த ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டுகளில் பங்கேற்று பரிசுகளை குவித்துள்ளன.