
சிவகங்கை அருகே நாமனுார் சீனிவாசன் 60. இவரது தந்தை வழி தாத்தா பெருமாள், அதே ஊரை சேர்ந்த ராமசாமியுடன் அயோத்தி சென்று வந்துள்ளார். அயோத்திக்கு பாதயாத்திரையாகவும் ரயில் (சென்னையில் 1856 ல் முதன் முதலாக ரயில் விடப்பட்டது) மூலமாகவும் சென்று வந்துள்ளனர். இது குறித்த ஓலைச்சுவடியை படிக்க முடியாததால் வரலாற்று ஆய்வாளர் காளைராஜனிடம் வழங்கியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, 1874ம் ஆண்டு தை மாதத்தில் நாமனூர் ராமசாமி, அவரது நண்பர் பெருமாளுடன் அயோத்தி சென்று ராமரை தரிசனம் செய்ததுடன் அங்குள்ள லோககுரு என்பவரை சந்தித்து ஆசி பெற்றுள்ளனர்.
யாத்திரை சென்ற ராமசாமி அங்கிருந்து ஊஞ்சல் ஒன்றையும் ஞாபகார்த்தமாக வாங்கி வந்துள்ளார்.
காசி, அயோத்தி சென்று வந்ததை ஓலைச் சுவடியில் எழுதி வைத்துள்ளார். 57 செ.மீ., நீளமும் நான்கு செ.மீ., அகலமும் கொண்ட இந்த ஓலைச்சுவடியில் நெருக்கமாக எழுதி வைக்கப்பட்டுள்ளது.
ஐந்து முதல் ஏழு சுவடிகளை கொண்ட 11 கட்டு ஓலைச் சுவடிகள் உள்ளன.
இதில் சிந்தாமணி, ராமாயணம், மகாபாரதம் உள்ளிட்டவைகளும் ஜோதிடம் பார்க்க பயன்படும் 12 ராசிகளுக்கு உரிய வாய்ப்பாடும் உள்ளது.
காசியில் இருந்து கொண்டு வந்த ஊஞ்சலில் தூக்குமூச்சி அய்யனார் இருப்பதாக கிராம மக்கள் நம்புகின்றனர்.
எனவே இந்த ஊஞ்சலை அங்குள்ள திருவினை அய்யனார் கோயிலில் வைத்து வழிபட்டு வருகின்றனர்.
மேலும் ராமாயண கதைகளை மூலிகைகள் மூலம் ஓவியங்களாக கோயிலில் ராமசாமி வரைந்துள்ளார். கோயிலிலும் ஓலைச்சுவடிகள் வைத்து வழிபட்டு வருவதாக தெரிகிறது, என்றார்.