/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் அரசு டவுன் பஸ் பழுது
/
திருப்புவனத்தில் அரசு டவுன் பஸ் பழுது
ADDED : ஆக 09, 2025 03:30 AM

திருப்புவனம்: திருப்புவனம் அரசு போக்குவரத்து கழக கிளை பணிமனைக்கு தொடர்ச்சியாக பழைய பஸ்களையே ஒதுக்குவதால் பாதி வழியில் பழுதாகி நின்று பயணிகள் பரிதவிப்பிற்குள்ளாகின்றனர்.
அரசு போக்குவரத்து கழக மதுரை கோட்ட கிளை பணிமனை மூலம் திருப்புவனம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களுக்கு 44 டவுன் பஸ்கள் இயக்கப்படுகின்றன.
தினசரி இரண்டு முதல் ஐந்து முறை கிராமங்களில் இருந்து மதுரை மத்திய பேருந்து நிலையம் வரை இயக்கப்படுகின்றன.
கிளை பணிமனையில் 44 பஸ்கள் இருந்தாலும் அதில் 32 பஸ்கள் தான் ஓரளவிற்கு இயங்கும் நிலையில் உள்ளது.
இதில் 20 பஸ்கள் செப்டம்பருடன் காலாவதியாக உள்ளதால் புதிய பஸ்கள் வழங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். ஆனால் தொலை துாரங்களுக்கு இயக்கப்பட்டு பழுதான சொகுசு பஸ்கள் உள்ளிட்ட ஐந்து பஸ்கள் தான் தற்போது வழங்கப்பட்டுள்ளன.
அந்த பஸ்களும் ஸ்டார்ட் ஆகாமல் அடிக்கடி பழுதாகி நிற்பதால் பயணிகள் குறிப்பிட்ட நேரத்திற்கு செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
நேற்று காலை திருப்புவனம் வழியாக மதுரை சென்ற டவுன் பஸ் கிளட்ச் கேபிள் பழுதானதால் குறுகிய வளைவில் பழுதாகி நின்றது.
பயணிகள் பலரும் வேறு வழியின்றி ஷேர் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களில் ஏறி மதுரை சென்றனர்.
மேலராங்கியம் சென்ற டவுன் பஸ் பழுதாகி நின்று போனதால் அருகில் இருந்த ஆட்டோ டிரைவர்கள், பொதுமக்கள் நீண்ட தூரம் தள்ளிச் சென்றனர்.

