ADDED : ஜன 18, 2025 07:28 AM

திருப்புவனம் : திருப்புவனத்தில் கின்னிகோழிகள் விலை உயர்ந்துள்ளது.
கிராமங்களில் நாட்டு கோழி, வாத்து, வான்கோழி, கின்னிகோழி வளர்ப்பதுண்டு. விவசாயிகள் பெரும்பாலும் பயன்தர கூடிய நாட்டு கோழி, சேவல், வாத்து வளர்ப்பதையே விரும்புவார்கள், குறிப்பிட்ட காலம் வரை வளர்த்த பின் முட்டை, மற்றும் இறைச்சிக்காக விற்பனை செய்து விடுவார்கள், ஆனால் கின்னிகோழி வளர்க்க விரும்ப மாட்டார்கள், காரணம் கின்னிகோழி முட்டை, இறைச்சி யாரும் விரும்பி உண்பது கிடையாது.
சமீப காலமாக மழை காரணமாக வயல்வெளி, கண்மாய், கால்வாய்களில் மழை நீர் தேங்கி இருப்பதால் பாம்பு, எலி உள்ளிட்டவைகள் இருப்பிடத்தை விட்டு வெளியேறி உலா வருகின்றன. இரவு நேரங்களில் வீடுகளில் வெளிச்சத்தை நோக்கி பாம்பு, எலிகள் வருவதால் கிராமங்களில் அச்சத்துடனேயே இருக்க வேண்டியுள்ளது.
கின்னி கோழிகள் சப்தத்தை கேட்டால் பாம்பு, எலி உள்ளிட்டவை வராது என்பது நம்பிக்கை. காரணம் பாம்பு, எலியை கின்னி கோழிகள் வேட்டையாடும், இதனால் சமீப காலமாக சந்தைகளில் கின்னிகோழிகள் விலை உயர்ந்து வருகிறது.
கடந்த மாதம் கின்னி கோழி ஒரு ஜோடி 800 ரூபாய் என விற்பனை செய்யப்பட்ட நிலையில் இந்த வாரச்சந்தையில் ஆயிரத்து 200 ரூபாய் என விற்பனை செய்யப்பட்டது.
விவசாயிகள் கூறுகையில், கின்னிகோழிகளை நாட்டு கோழி, குஞ்சுகளை பாதுகாக்க மட்டும் தான் வளர்க்க முடியும், இரவு நேரங்களில் பாம்பு உள்ளிட்டவை வந்து கோழி குஞ்சுகளை விழுங்கிவிடும், கின்னி கோழிகள்சப்தத்தை கேட்டால் பாம்பு வராது.
ஒரு கின்னி கோழி 20 முட்டைகள் வரை இடும், சரியாக அடை காக்க தெரியாது, 30 நாளில் குஞ்சு பொறித்து விடும், இறக்கை வளர்ந்த உடன் பறந்து வேறு இடம் ஓடி விடும் எனவே அடிக்கடி இறக்கையை வெட்டி கொண்டே இருக்க வேண்டும், என்றனர்.