/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
விபத்தை ஏற்படுத்தும் கனரக இயந்திரங்கள்
/
விபத்தை ஏற்படுத்தும் கனரக இயந்திரங்கள்
ADDED : ஜன 11, 2024 04:17 AM

திருப்புவனம் : மதுரை--பரமக்குடி நான்கு வழிச்சாலையில் விதிகளை மீறி கன ரக வாகனங்களை கொண்டு செல்வதால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டு போக்குவரத்து நடந்து வருகிறது. தினசரி 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் இப்பாதையை கடந்து செல்கின்றன. மதுரையில் இருந்து திருப்புவனம், திருப்பாச்சேத்தி, பரமக்குடி உள்ளிட்ட பகுதிகளுக்கு ஏராளமான கனரக வாகனங்கள் கொண்டு செல்லப்படுகின்றன.
விவசாய பணிகளுக்காகவும், கட்டுமான பணிகளுக்காகவும் மண் அள்ளும் இயந்திரம், ரோடு ரோலர், மினி டோசர் உள்ளிட்ட கனரக வாகனங்களை சாலையில் இயக்கினால் நேர விரயமும் பொருட் செலவும் அதிகரிக்கும் என்பதால் லாரிகள், டிரைலர்களில் ஏற்றி செல்கின்றனர்.
இதுபோன்ற நேரத்தில் உரிய பாதுகாப்பு விதிகளை கடைபிடிப்பதில்லை. வாகனத்தின் உயரம், எடை ஆகியவற்றிற்கு ஏற்ற வாகனத்தை பயன்படுத்தாமல் லாரி, வேன்களில் ஏற்றி செல்கின்றனர்.
மேலும் கன ரக வாகனத்தை லாரிகளில் கொண்டு செல்லும் போது அவற்றை வாகனத்துடன் இணைத்து கயிறு அல்லது இரும்புச்சங்கிலி வைத்து பாதுகாப்பாக கட்டி எடுத்துச் செல்ல வேண்டும், நடைமுறையில் அவ்வாறு செய்யாமல் விபத்தை ஏற்படுத்தும் வகையில் கொண்டு செல்கின்றனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன் விதிகளை பின்பற்றாததால் கொத்தங்குளம் அருகே விபத்து ஏற்பட்டு ஒருவர் உயிரிழந்தார்.
நான்கு வழிச்சாலையில் விதிகளை மீறி வாகனங்களை கொண்டு செல்வது போக்குவரத்து போலீசாரும் நெடுஞ்சாலைத்துறை போலீசாரும் கண்டு கொள்வதில்லை, சிவகங்கை, ராமநாதபுர மாவட்டங்களில் அறுவடை தொடங்கியுள்ள நிலையில் வெளிமாவட்டங்களில் இருந்து அறுவடை இயந்திரங்கள், வைக்கோல் சுருட்டும் இயந்திரங்கள் உள்ளிட்டவையும் பாதுகாப்பின்றி கொண்டு செல்லப்படுகின்றன.
எனவே விபரீதம் ஏற்படும் முன் விதிகளை மீறி கொண்டு செல்லப்படும் வாகனங்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.