கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி; வாகன ஓட்டிகள் சிரமம்
கிடப்பில் போடப்பட்ட ரோடு பணி; வாகன ஓட்டிகள் சிரமம்
ADDED : ஏப் 04, 2026 04:56 PM
திருப்புவனம்:மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலையில் ரோடு பணி கிடப்பில் போடப்பட்டதால் வாகன ஓட்டிகள் சிரமத்திற்குள்ளாகின்றனர்.
மதுரையில் இருந்து பரமக்குடி வரை நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது.
திருப்பாச்சேத்தியில் டோல்கேட் அமைக்கப்பட்டு சுங்க கட்டணம் 2019 ஜூலை முதல் வசூலிக்கப்படுகிறது. மதுரையில் இருந்து ராமேஸ்வரம் வரை தேசிய நெடுஞ்சாலை இருந்தாலும் நான்கு வழிச்சாலைக்காக கூடுதலாக இடம் கையகப்படுத்தப்பட்டு புதிதாக ரோடு அமைக்கப்பட்டது. விவசாய நிலங்களின் மேல் புதிதாக ரோடு அமைக்கப்பட்டதால் பல இடங்களில் ரோடு சேதமடைந்து விட்டன. இதனால் வாகனங்களை இயக்க முடியாமல் தினசரி விபத்து நேரிட்ட வண்ணம் இருந்தது.
எனவே நான்கு வழிச்சாலையில் புதிதாக ரோடு போட வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியதை தொடர்ந்து ரோடு போடும் பணி கடந்த ஒரு மாதத்திற்கு முன் தொடங்கியது. ஏற்கனவே இருந்த தார் ரோடுகளை இயந்திரம் மூலம் கீறி பழைய தார், ஜல்லிகளை அகற்றினர். தார்ச்சாலை பெயர்த்து எடுக்கப்பட்டு ஒரு மாதத்திற்கு மேலாகியும் இன்று வரை தார்ச்சாலை அமைக்கப்படவில்லை. ஒருசில இடங்களில் மட்டும் தார்ச்சாலை அமைக்கப்பட்டது. இதனால் இருசக்கர வாகன ஓட்டிகள் பலரும் ரோடுகளில் தடுமாறி விழுந்து காயமடைந்து வருகின்றனர். சாலை போடும் பணிக்காக வந்த வாகனங்களும் திரும்ப கொண்டு செல்லப்பட்டு விட்டன. இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தார்ரோடு பணியை முழுமையாக நிறைவேற்ற வேண்டும் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.
