/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
இளையான்குடி செந்தமிழ் நகரில் காவிரி குடிநீரின்றி அவதி
/
இளையான்குடி செந்தமிழ் நகரில் காவிரி குடிநீரின்றி அவதி
இளையான்குடி செந்தமிழ் நகரில் காவிரி குடிநீரின்றி அவதி
இளையான்குடி செந்தமிழ் நகரில் காவிரி குடிநீரின்றி அவதி
ADDED : பிப் 14, 2025 07:22 AM

சிவகங்கை: இளையான்குடி அருகேயுள்ள செந்தமிழ் நகர் மக்களுக்கு பல மாதங்களாக காவிரி கூட்டு குடிநீர் வழங்காததால், குடம் ரூ.12 க்கு வாங்கும் நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றியம், காரைக்குளம் ஊராட்சி செந்தமிழ்நகரில் 120 குடும்பங்கள் வரை வசிக்கின்றனர்.
இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய அங்கு மேல்நிலை குடிநீர் தொட்டி அமைத்து, காவிரி கூட்டு குடிநீர் வினியோகம் செய்து வந்தனர். காவிரி குடிநீரை நம்பி செந்தமிழ்நகரில் உள்ள அனைத்து வீடுகளிலுள்ளவர்கள் குழாய் இணைப்பு பெற்றுள்ளனர்.
இந்நிலையில் எந்தவித முன்அறிவிப்பும் இன்றி கடந்த சில மாதங்களாக காவிரி குடிநீர் வினியோகமில்லை. குடிநீரின்றி இந்நகர் மக்கள் தனியாரிடம் குடம் ரூ.12க்கு வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
கோடைகாலம் துவங்க உள்ள நிலையில் இப்போதே குடிநீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், கடும் வெப்ப காலங்களில் காவிரி குடிநீர் முழுமையாக வினியோகம் செய்யப்படுமா என்ற சந்தேகம் மக்களுக்கு ஏற்பட்டுள்ளது.
எனவே தடை செய்யப்பட்ட காவிரி குடிநீரை தடையின்றி வினியோகம் செய்ய வேண்டும் என காரைக்குளம் ஊராட்சி, செந்தமிழ் நகர் மக்கள் நேற்று கலெக்டரிடம் மனு அளிக்க, நீண்ட நேரம் காத்திருந்தனர். கலெக்டர் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டத்தில் இருந்ததால், இவர்களிடம் கலெக்டர் பி.ஏ.,(பொது) முத்துக்கழுவன் மனுவை பெற்றார்.
முதல்வரின் தனிப்பிரிவுக்கு மனு
செந்தமிழ்நகர் முத்துச்சாமி கூறியதாவது, கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக காவிரி குடிநீர் வினியோகம் செய்யவில்லை.
இது குறித்து முதல்வரின் தனிப்பிரிவு, கலெக்டர், இளையான்குடி பி.டி.ஓ.,விடம் பல முறை மனு செய்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை. இதனால், தனியாரிடம் குடிநீரை பணம் செலுத்தி வாங்கி வருகிறோம்.
மாவட்ட நிர்வாகம் செந்தமிழ்நகருக்கு காவிரி குடிநீரை வினியோகம் செய்ய வேண்டும், என்றார்.