/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
காளையார்கோவில் குப்பை தொட்டியில் கொட்டப்படும் மருத்துவ கழிவால் பாதிப்பு
/
காளையார்கோவில் குப்பை தொட்டியில் கொட்டப்படும் மருத்துவ கழிவால் பாதிப்பு
காளையார்கோவில் குப்பை தொட்டியில் கொட்டப்படும் மருத்துவ கழிவால் பாதிப்பு
காளையார்கோவில் குப்பை தொட்டியில் கொட்டப்படும் மருத்துவ கழிவால் பாதிப்பு
ADDED : ஏப் 25, 2025 06:36 AM

சிவகங்கை: காளையார்கோவில் ஊராட்சியில் குப்பை தொட்டிகளில் மருத்துவ, ஓட்டல் கழிவுகளை கொட்டுவதால், துாய்மை பணியாளர்களின் கைகளில் ரத்தக்காயம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.
காளையார்கோவில் ஊராட்சியின் கீழ் 9 வார்டுகளில் 40 ஆயிரம் பேர் வரை வசிக்கின்றனர். இந்நகரில் சேகரமாகும் குப்பையை சேகரிக்க நிரந்தர துாய்மை பணியாளர் 6 பேர், துாய்மை பாரத திட்டத்தில் 21 பேர், தற்காலிகமாக 15 துாய்மை பணியாளர்கள் தினமும் 5 முதல் 6 டன் குப்பை சேகரிக்கின்றனர்.
இது தவிர இங்குள்ள ஓட்டல், தனியார் கிளினிக்குகளில் சேகரமாகும் மருத்துவ கழிவுகளை குப்பை தொட்டியில் கொட்டாமல், மருத்துவ கழிவு சுத்திகரிப்பிற்காக பிரித்து அனுப்ப வேண்டும்.
ஆனால், இந்த ஊராட்சி நிர்வாகம் கடுமையான உத்தரவை பிறப்பிக்காததால், தெருக்களில் உள்ள குப்பை தொட்டிகளுக்குள் ஊசி மற்றும் மருந்து கழிவுகளை போட்டு விடுகின்றனர்.
அதே போன்று ஓட்டல்களில் விரயமாகும் உணவு பொருட்களையும் இங்கு கொட்டு கின்றனர். இதனால் துாய்மை பணியாளர்கள் இவற்றை அப்புறப்படுத்த முடியாமல் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
கை, முகக்கவசம் இன்றி தவிப்பு
கலெக்டர் ஆஷா அஜித் ஆய்வுக்கு வரும்போது அன்று மட்டுமே துாய்மை பணியாளர்களுக்கு கையுறை, முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு கவசங்களை வழங்கினர். அதற்கு பின் பாதுகாப்பு கவசங்களை வழங்காமல், குப்பை, மருத்துவ கழிவுகளை கையில் எடுப்பதால் ரத்த காயம் ஏற்படுவதோடு,கைகளில் ஊசிகள் குத்த நேரிடுகிறது.
இந்த ஊராட்சியில் பணிபுரியும் துாய்மை பணியாளர்கள் பெரிதும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.
சிவகங்கை ஊராட்சி ஒன்றிய பி.டி.ஓ.,விடம் பல முறை புகார் கொடுத்தும் மக்கும், மக்காத குப்பை, மருத்துவ கழிவுகளை பிரித்து வழங்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என துாய்மை பணியாளர்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

