UPDATED : நவ 29, 2026 11:08 AM
ADDED : நவ 29, 2026 11:08 AM

காரைக்குடி: காரைக்குடி அருகே இலுப்பக்குடியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் வைக்கப்பட்டுள்ள தவறான பெயர்ப் பலகையால் பக்தர்கள் குழப்பம் அடைந்து வருகின்றனர்.
காரைக்குடி அருகேயுள்ள அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் தென் திருப்பதி என்று அழைக்கப்படுகிறது. புரட்டாசி, வைகாசித் திருவிழா பிரசித்தி பெற்றதாகும். காரைக்குடி மட்டுமின்றி சுற்று வட்டாரத்தைச் சேர்ந்த பக்தர்கள் திருவிழா காலங்களில் வந்து செல்கின்றனர். காரைக்குடியின் முக்கிய சுற்றுலா தளங்கள் மற்றும் கோயில்கள் உள்ள பகுதிகளில் நெடுஞ்சாலை துறை சார்பில் பெயர்ப்பலகை வைக்கப்பட்டுள்ளது. அரியக்குடி செல்லும் சாலையில், இலுப்பக்குடி ரயில்வே கேட் அருகே நெடுஞ்சாலை துறை சார்பில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதில் அரியக்குடி திருவேங்கடமுடையான் கோயில் என்பதற்கு பதிலாக நாராயண பெருமாள் கோயில் என வைக்கப்பட்டுள்ளது. இதனால் பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் குழப்பமடைகின்றனர். இதுகுறித்து சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை துறை அதிகாரிகளிடம் புகார் அளித்து, இதுவரை எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. ஏற்கனவே பெயர் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில் மேலும் ஒரு பெயர் பலகை எதற்கு என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
