ADDED : மே 23, 2025 11:50 PM
திருப்பாச்சேத்தி:மதுரையில் இருந்து பரமக்குடி வரை செல்லும் நான்கு வழிச்சாலை வழியாக செல்லும் வாகனங்களில் திருப்பாச்சேத்தி, போகலூர் ஆகிய இடங்களில் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. திருப்பாச்சேத்தி டோல்கேட்டில் தினசரி ஐந்தாயிரம் முதல் ஆறாயிரம் வாகனங்கள் வரை கடக்கின்றன. தினசரி ஆறு லட்ச ரூபாய் வரை கட்டணம் வசூலாகும்.
தற்போது இளையான்குடி, மானாமதுரை உள்ளிட்ட பகுதிகளில் அடுத்தடுத்து ஜல்லிக்கட்டு திருவிழா நடந்து வருவதால் ஜல்லிக்கட்டு காளைகளை ஏற்றி வரும் வாகனங்கள் இப்பாதையை கடந்து தான் செல்ல வேண்டியுள்ளது. ஜல்லிக்கட்டு திருவிழா நடைபெறும் காலங்களில் ஏழாயிரம் வாகனங்கள் வரை டோல்கேட்டை கடந்து செல்கின்றன.
ஒருமுறை சென்று வர சிறிய சரக்கு வாகனத்திற்கு 135 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனால் ஜல்லிக்கட்டு நடைபெறும் காலங்களில் டோல்கேட்டில் கூடுதலாக ஒரு லட்ச ரூபாய் வசூலாகி வருகிறது.