ADDED : ஆக 14, 2025 02:34 AM
சிவகங்கை: தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்படுத்தாத ஓட்டல்கள் விருது பெற செப்., 5 க்குள் விண்ணப்பிக்க வேண்டும் என கலெக்டர் பொற்கொடி தெரிவித்தார்.
அவர் கூறியதாவது: அரசால் தடை செய்த ஒரு முறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் மற்றும் உணவு பாதுகாப்புத்துறை அனுமதிக்காத பிளாஸ்டிக் ஆகியவைகளை பயன்படுத்தாத ஓட்டல்களுக்கு, அரசு சார்பில் விருது வழங்கப்பட உள்ளது. ஓட்டல்களில் தடை செய்த பிளாஸ்டிக் பேப்பரில் உணவு பரிமாறவும், பார்சல் கட்டவும் பயன்படுத்தாமல், மக்கும் தன்மையுள்ள பொருட்களை பயன்படுத்த வேண்டும்.
ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை லாபம் ஈட்டும் ஓட்டல்களுக்கு, அரசு ரூ.1 லட்சம் மற்றும் விருதினை வழங்க உள்ளது. சிறு மற்றும் தெருவோர வணிகர்களுக்கு விருதுடன், ரூ.50 ஆயிரம் பரிசு தொகை வழங்கப்படும். தகுதி, விருப்பம் உள்ள வணிகர்கள் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர், கலெக்டர் அலுவலகம், சிவகங்கையில் விண்ணப்பத்தை பெற்று பூர்த்தி செய்த விண்ணப்பங்களை செப்., 5 க்குள் சமர்பிக்க வேண்டும்.
இதில் தேர்வு செய்யப்படும் ஓட்டல், வணிக நிறுவனங்களுக்கு விருது, பரிசு தொகை வழங்கப்படும், என்றார்.