/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது, கறி விருந்து கொண்டாட்டமா? வெளியாட்களாக இருக்கலாம் என டாக்டர் சந்தேகம்
/
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது, கறி விருந்து கொண்டாட்டமா? வெளியாட்களாக இருக்கலாம் என டாக்டர் சந்தேகம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது, கறி விருந்து கொண்டாட்டமா? வெளியாட்களாக இருக்கலாம் என டாக்டர் சந்தேகம்
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மது, கறி விருந்து கொண்டாட்டமா? வெளியாட்களாக இருக்கலாம் என டாக்டர் சந்தேகம்
ADDED : ஜன 03, 2026 07:07 AM

காரைக்குடி: சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகே செம்பனுார் அரசு ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர் அறையில் மது பாட்டிலுடன், கறி விருந்து நடந்துள்ளதாக சிகிச்சைக்கு சென்ற ஒருவர் வெளியிட்ட வீடியோ வைரலாகிறது. ஆனால் வெளியாட்கள் குடித்து விட்டு சென்றிருக்கலாம் என டாக்டர் சசிகுமார் சந்தேகம் தெரிவித்தார்.
செம்பனுாரில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் செயல்படுகிறது. இங்கு புற நோயாளிகள் பிரிவு, மகப்பேறு பிரிவு, அறுவை சிகிச்சை, சித்தா பிரிவு, பல் மருத்துவம், தொழு நோய் பிரிவு உட்பட பல்வேறு பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன. இம்மருத்துவமனைக்கு செம்பனுார், கல்லல், சொக்கநாதபுரம், பனங்குடி, கண்டரமாணிக்கம் உள்ளிட்ட சுற்றுவட்டார மக்கள் சிகிச்சைக்காக வந்து செல்கின்றனர்.
கடந்தாண்டு டிச., 31 இரவு விபத்தில் சிக்கி காயமடைந்த ஒருவர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சென்றார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஊழியர்கள் இல்லாததால் அந்த வளாகத்திலுள்ள கட்டடங்களில் இருக்கிறார்களா என தேடியுள்ளார். அங்கிருந்த டாக்டர் அறைக்கு சென்ற போது, கட்டிலின் மீது மது, சிக்கன் உட்பட பல்வேறு அசைவ பொருட்களுடன் புத்தாண்டு பார்ட்டி நடந்ததற்கான அறிகுறிகள் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியுற்ற அந்த நபர் அதை வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இது வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.
அன்று பணியில் இருந்த டாக்டர் சசிகுமார் கூறியதாவது : புறநோயாளிகள் பிரிவு உட்பட அனைத்து பிரிவுகளும் வேறொரு கட்டடத்தில் நடக்கிறது. பிரசவம் மட்டும் அவசர சிகிச்சை அளிக்க வேண்டியிருந்தால் மட்டுமே சர்ச்சைக்குரிய கட்டடம் பயன்படுத்தப்படும். எனவே அந்த கட்டடம் பூட்டி தான் இருக்கும். பணியாளரிடம் சாவி இருக்கும். பணியாளரிடமும் விசாரித்து விட்டோம். கட்டட வேலை முடிந்து பொருட்கள் மாற்றியதால் சி.சி.டிவியும் பயன்பாட்டில் இல்லை. எனக்கும் மது பழக்கம் இல்லை. மேலும் அந்த கட்டடத்திற்கு செல்லவே மாட்டோம். வெளியாட்கள் அங்கு குடித்து விட்டு சென்றிருக்கலாம் என்றார்.

