/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
கண்மாய் சங்க தேர்தல்: விவசாயிகள் போராட்டம்
/
கண்மாய் சங்க தேர்தல்: விவசாயிகள் போராட்டம்
ADDED : நவ 24, 2024 07:45 AM

திருப்புவனம் : திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் நடந்த கண்மாய் சங்க தேர்தலில் ஒரு தரப்பு வேட்பு மனுவை அதிகாரிகள் தள்ளுபடி செய்ததாக கூறி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
திருப்புவனம் அருகே பிரமனுார் கண்மாய் நீரினை பயன்படுத்துபவர்கள் சங்கத்திற்கான தேர்தல் வரும் டிசம்பர் 1ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்பு மனுதாக்கல் நடந்து வருகிறது.
இதில் பிரமனூர், வயல்சேரி, வாடி, வாவியேரந்தல் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் வாக்களிக்க உள்ளனர். தலைவர் மற்றும் ஐந்து உறுப்பினர்களுக்கான தேர்தலில் அழகு செல்லச்சாமி, அழகுராஜா ஆகிய இரு தரப்பினர் போட்டியிடுகின்றனர். ஒரு உறுப்பினர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட உள்ளார். அழகுராஜா தலைமையிலான குழுவில் மலைராஜன்,முத்திருளன், கருப்பையா, முருகேசன் உள்ளிட்ட 4 பேர் உறுப்பினர்களாக போட்டியிடுகின்றனர்.
இதில் வேட்பு மனுதாக்கல் முடிந்த பிறகு தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்த மலைராஜன், முத்திருளன் ஆகிய இருவரது மனுக்கள் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறி அழகுராஜா தரப்பைச் சேர்ந்தவர்கள் நேற்று முன்தினம் மாலை திருப்புவனம் தாலுகா அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.
இதனை தொடர்ந்து நடந்த சமாதானப் பேச்சுவார்த்தையில் வேட்பு மனுவை மீண்டும் பரிசீலனை செய்வதாக தெரிவித்ததையடுத்து விவசாயிகள் கிளம்பி சென்றனர்.
தேர்தலில் போட்டியிட உள்ள அழகுராஜா தரப்பைச் சேர்ந்த முத்துப்பாண்டி கூறுகையில் : வேண்டுமென்றே தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவரின் வேட்பு மனுவை தள்ளுபடி செய்துள்ளனர்.
அனைத்து ஆவணங்களும் இணைத்துள்ள நிலையில் எதிர்தரப்பைச் சேர்ந்தவர்களுக்காக அதிகாரிகள் செயல்படுகின்றனர். எனவே தேர்தலின் போது பிரச்னை ஏற்பட வாய்ப்புண்டு. உரிய பாதுகாப்புடன் தேர்தல் நடந்த வேண்டும், என்றார்.
அழகு செல்லச்சாமி தரப்பினர் கூறுகையில் : வேட்பு மனுவில் வரிசை எண் தவறாக இருந்ததால் மனு ஏற்கப்படவில்லை. திருத்தத்திற்கு பின் ஏற்கப்பட்டது. அதற்குள் வேண்டுமென்றே பிரச்னை செய்கின்றனர், என்றனர்.