/
உள்ளூர் செய்திகள்
/
சிவகங்கை
/
திருப்புவனத்தில் கொட்டாங்குச்சி விற்பனை
/
திருப்புவனத்தில் கொட்டாங்குச்சி விற்பனை
ADDED : ஏப் 25, 2025 06:31 AM

திருப்புவனம்: திருப்புவனம் வட்டாரத்தில் கொட்டாங்குச்சி விற்பனை  நான்கு மடங்காக உயர்ந்துள்ளது.
வைகை ஆற்றை ஒட்டியுள்ள திருப்புவனம், திருப்பாச்சேத்தி, லாடனேந்தல், மடப்புரம் உள்ளிட்ட பகுதிகளில் தென்னை விவசாயம் மேற்கொள்ளப் படுகிறது.
தென்னை மரங்களில் இருந்து தேங்காய் தவிர உப தொழில்கள் மூலம் பலரும் வருவாய் ஈட்டி வருகின்றனர்.
திருப்புவனம் பகுதியில் கொப்பரை தேங்காய் விற்பனையும் நடந்து வருகிறது. கொப்பரைத் தேங்காய்க்கு பருப்பு எடுத்தது போக கொட்டாங்குச்சிகளை சேகரித்து விற்பனை செய்வார்கள், இதே போல வீடுகளில் தேங்காய் பருப்பு எடுத்த உடன் மீதமாகும் கொட்டாங்குச்சிகளை குப்பையில் போடுவார்கள் அல்லது சேகரித்து வைத்து கடைகளில் எடைக்கு போடுவார்கள்.
திருப்புவனத்தில் பத்திற்கும் மேற்பட்ட பழைய இரும்பு கடைகளில் கொட்டாங்குச்சிகள் வாங்குவது வழக்கம்.
கடந்த பிப்ரவரி  வரை ஒரு கிலோ கொட்டாங்குச்சி நான்கு ரூபாய் என வாங்கிய நிலையில் தற்போது ஒரு கிலோ 21 ரூபாய் என பழைய இரும்பு கடைகளில் கொள்முதல் செய்கின்றனர்.
வரும் காலங்களில் இது இன்னமும் உயரும். கொட்டாங்குச்சிகளை எரித்து கிடைக்கும் கரித்துகள்களை வைத்து கொசுவர்த்தி சுருள், ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி உள்ளிட்டவை தயாரிக்கப்பட்டன. சமீப காலமாக பேட்டரிகளில் கொட்டாங்குச்சி கரித்துகள் பயன்படுத்தப்படுவதாகவும், ஹோட்டல்களில் தயிர், ஐஸ்கிரீம் உள்ளிட்டவை கொட்டாங்குச்சிகளில் வைத்து வழங்கப்படுவதாகவும் எனவே தேவை அதிகரிப்பால் விலை உயர்ந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
பழைய இரும்பு பொருட்கள் வாங்கும் வியாபாரி பாலு கூறுகையில்: ஒரு வாரத்திற்கு 200 கிலோ வரை கொட்டாங்குச்சிகள் வரும், மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு மொத்தமாக அனுப்பி வைப்போம், பழைய இரும்பு கிலோ 24 ரூபாய் என வாங்கி வந்தோம் அதற்கு இணையாக கொட்டாங்குச்சியும் வாங்கி வருகிறோம், என்றார்.

