UPDATED : நவ 12, 2026 03:24 PM
ADDED : நவ 12, 2026 03:22 PM

சிவகங்கை: சிவகங்கை பழைய மருத்துவமனை அருகேயுள்ள குண்டூரணியில் குப்பைகளை கொட்டுவதால் துர்நாற்றம் வீசி கருவேல மரங்கள் முளைத்து பராமரிப்பின்றி இருப்பதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
சிவகங்கை நகரின் குடிநீர் தேவை மற்றும் விவசாயத் தேவைக்காக தெப்பக்குளத்தை சுற்றிலும் 13 குளங்கள் மற்றும் ஊரணிகள் வெட்டப்பட்டுள்ளது. இவை ஒன்றுக்கொன்று வரத்துக்கால்வாய் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. நகரில் பெய்யக்கூடிய மழைநீரை சேமிக்கும் வகையிலும் இந்த குளங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கம் காரணமாக தற்போது இந்த ஊரணிகள் சுருங்கி வரத்து கால்வாய்களும் அடைப்பட்டுள்ளது. இதனால் தற்போது தெப்பக்குளத்தை தவிர மற்ற ஊரணிகளில் தண்ணீர் இல்லாமல் உள்ளது. வறண்டு கிடக்கும் இந்த ஊரணி கரைகளில் சிலர் பொருட்களை வைத்தும் கடை அமைத்தும் ஆக்கிரமித்து வருகின்றனர்.
திருப்புத்துார் ரோட்டில் உள்ள உடையார் சேர்வை ஊரணி கரை முழுவதும் கடைகளும் கட்டடங்களும் அமைக்கப்பட்டு ஆக்கிரமிப்பின் பிடியில் உள்ளது. அதேபோல் இந்த குண்டூரணியிலும் இந்த பகுதி கடைகள் மற்றும் பொதுமக்கள் குப்பைகளை கொட்டி குப்பை மேடாக மாற்றி வருகின்றனர். ஊரணிக்கான வரத்து கால்வாய்களும் அடைப்பட்டிருப்பதால் ஊரணி முழுவதும் முட்செடிகள் முளைத்துள்ளது. எனவே நகராட்சி நிர்வாகம் குண்டூரணி முதல் நகரில் உள்ள அனைத்து ஊராணிகளை துார்வாரி வரத்து கால்வாய்களை சீரமைத்து கரையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
